மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே. அங்குதான் தீவிரவாதம் தொடங்குகிறது எனக் கூறினார். இந்து தீவிரவாதம் என அவர் கூறிய வார்த்தைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து பா.ஜனதா வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர், நாதுராம் கோட்சே தேச பக்தராக இருந்தார் எனக் குறிப்பிட்டார்.
மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேயை பிரக்யா சிங் தாக்குர் தேசபக்தர் என்று சான்று அளித்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் பிரக்யா சிங் தாக்குர் கருத்தை பாரதீய ஜனதா கட்சி ஏற்கவில்லை. கட்சியின் தலைமையில் இருந்து நெருக்கடி ஏற்படவும் பிரக்யா சிங் மன்னிப்பு கோரினார். இந்நிலையில் பிரதமர் மோடியும் பிரக்யா சிங்கிற்கு கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி தனது கண்டனங்களை தெரிவித்திருக்கிறார். டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், கோட்சே, காந்தியின் உடலைத்தான் படுகொலை செய்தார். ஆனால், பிரக்யா சிங் போன்றவர்கள் அவரது ஆன்மாவையும் கொலை செய்து வருகிறார்கள். அதனுடன் அகிம்சை, அமைதி, சகிப்புத்தன்மையையும் சிதைக்கிறார்கள். மகாத்மா காந்தி கட்சிகளுக்கும், அரசியலுக்கும் அப்பாற்பட்டவர்.
பா.ஜனதா இத்தகைய நபர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும். சிறு ஆதாயங்களுக்காக இவர்களை விட்டுவைத்தல் ராஜ தர்மத்துக்கு எதிரானது எனக் கூறியுள்ளார்.