வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அம்மாபட்டி புதுப்பட்டியை சேர்ந்தவர் மருதநாயகம். அவருடைய மனைவி மருதாயம்மாள் (வயது 69). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மருதநாயகம் இறந்து விட்டார். இதனால் தனது தோட்டத்து வீட்டில் மருதாயம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு கட்டிலில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அங்கு வந்தார். பின்னர் மருதாயம்மாள் காதில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க தோடுகளை கழற்றி தருமாறு கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்தார். மேலும் திருடன், திருடன் என கத்த முயன்றார்.
இதில் ஆத்திரம் அடைந்த மர்ம நபர், தனது கையால் மருதாயம்மாளின் கழுத்தை நெரித்தார். சிறிதுநேரத்தில் மருதாயம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே நீண்டநேரமாகியும் மருதாயம்மாள் கட்டிலில் இருந்து எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் மருதாயம்மாள் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து எரியோடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மருதாயம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோப்பநாய் லிண்டா சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சென்ற நாய், சிறிதுதூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதேபோல் சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த ரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். இந்த கொலை தொடர்பாக மருதாயம்மாளின் மகன் சுந்தரம் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை வலைவீசி தேடி வருகிறார்.
ஒரு பவுன் நகைக்காக மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.