பெங்களூரு,
பெங்களூரு விவசாய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) 107-வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகை தருகிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று மதியம் 2 மணியளவில் பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திறங்குகிறார். பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் துமகூருவுக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார். துமகூருவில் உள்ள சித்தகங்கா மடத்திற்கு மதியம் 2.15 மணியளவில் அவர் செல்ல இருக்கிறார்.
விவசாயிகள் மாநாடு
சித்தகங்கா மடத்தில் உள்ள மறைந்த மடாதிபதி சிவக்குமார சுவாமியின் சமாதியில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்துகிறார். பின்னர் சித்தகங்கா மடத்தில் உள்ள மாணவ, மாணவிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் முன்பு பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார்.
அதைத்தொடர்ந்து, துமகூரு ஜூனியர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். மேலும் முற்போக்கு விவசாயிகள் 28 பேருக்கு கிருஷி கர்மான் விருதை அவர் வழங்கி பாராட்டுகிறார். துமகூருவில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் முதல்-மந்திரி எடியூரப்பா, மணிப்பூர், ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரிகள், உத்தரகாண்ட் மாநில கவர்னர் கலந்துகொள்ள உள்ளனர்.
அறிவியல் மாநாடு
துமகூரு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவுக்கு திரும்புகிறார். இன்று மாலைராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்று பார்வையிடுகிறார். இன்று இரவு பெங்களூருவில் உள்ள கவர்னர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி தங்குகிறார். நாளை (வெள்ளிக்கிழமை) பெங்களூரு விவசாய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்திய அறிவியல் மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி துமகூருவில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்வதால், அதற்கான ஏற்பாடுகளை மத்திய மந்திரிகள் நரேந்திரசிங் தாமோர், பிரகலாத் ஜோஷி, கர்நாடக மந்திரி வி.சோமண்ணா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் மற்றும் துமகூரு மாவட்ட கலெக்டர், அதிகாரிகள் செய்து வருகின்றனர். பிரதமரின் வருகையையொட்டி துமகூரு சித்தகங்கா மடத்திற்கு இன்று பக்தர்கள் வரவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆயிரம் பஸ்கள்
துமகூருவில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் கர்நாடகம் முழுவதும் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக ஆயிரம் அரசு பஸ்களில் துமகூருவுக்கு விவசாயிகள் அழைத்து வரப்பட உள்ளனர். துமகூரு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டும் 500 பஸ்களில் விவசாயிகள் வருகைதர உள்ளனர்.
பிரதமர் வருகையையொட்டி துமகூரு நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அங்குள்ள முக்கிய சாலைகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. கடந்த 10 நாட்களாக துமகூரு நகரை தூய்மை செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகத்திற்கு வருவதையொட்டி, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முதல்-மந்திரி எடியூரப்பா, கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் முடிவு செய்து உள்ளனர்.
பலத்த பாதுகாப்பு
பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி பெங்களூரு, துமகூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. துமகூருவில் விவசாயிகள் மாநாடு நடைபெறும் ஜூனியர் கல்லூரி மைதானத்திற்கு நேற்று துமகூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வம்சி கிருஷ்ணா சென்றார். பின்னர் அவர் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார். துமகூரு மைதானத்தை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மைதானத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
துமகூருவை போன்று பெங்களூருவிலும் பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பெங்களூரு விவசாய பல்கலைக்கழகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.