காரைக்கால்,
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு அழகு நகர் பகுதியில் இருந்து, தமிழகப் பகுதிக்கு காரில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக, மாவட்ட சிறப்பு அதிரடிப்படை பிரிவு போலீசாருக்கு, நேற்று முன் தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே மாவட்ட சிறப்பு அதிரடிப்படை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் தலைமையிலான போலீசார், அந்த இடத்துக்கு விரைந்து சென்று அதிரடியாக ஆய்வு செய்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்ற கார் ஒன்றை சோதனை செய்தபோது, அதில் 31 அட்டைப் பெட்டிகளில் ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, கார் மற்றும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, திருநள்ளாறு போலீசார் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் முன்னிலையில் மாவட்ட கலால் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட மதுபாட்டில்கள் போலியானது என்றும், தமிழகப் பகுதிக்கு கடத்த முயற்சி செய்தபோது, போலீசாரின் நடமாட்டத்தை பார்த்து கடத்தல் ஆசாமிகள் காருடன் மதுபாட்டில்களை விட்டுவிட்டு தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. மதுபாட்டில்களை கடத்த முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.