செய்திகள்

பொலிவியாவில் நீடிக்கும் அரசியல் குழப்பம்: இடைக்கால அதிபராக தன்னை தானே அறிவித்துக்கொண்ட பெண் எம்.பி.

பொலிவியாவில் நீடிக்கும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே பெண் எம்.பி. ஒருவர் தன்னை தானே இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டார்.

தினத்தந்தி

லா பாஸ்,

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் தொடர்ச்சியான நெருக்கடி காரணமாக அதிபர் இவோ மோரலஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் ராணுவம் அவரை கைது செய்ய முயற்சிப்பதாக தகவல்கள் பரவின. இதனால் அவர் நாட்டை விட்டு வெளியேறி மெக்சிகோவில் தஞ்சம் அடைந்தார். எனினும் பொலிவியாவில் தொடர்ந்து அரசியல் குழப்பம் மற்றும் அசாதாரண சூழ்நிலை நீடிக்கிறது.

இந்த நிலையில் பொலிவியா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், பெண் எம்.பி.யுமான ஜீனைன் அனெஸ் நாட்டின் இடைக்கால அதிபராக தன்னை தானே அறிவித்துக்கொண்டார். நேற்று முன்தினம் நடைபெற்ற நாடாளுமன்ற அவசர கூட்டத்தில் அவர் தனது முடிவை அறிவித்தார்.

ஆனால் இவோ மோரலசின் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் ஜீனைன் அனெசை இடைக்கால அதிபராக அங்கீகரிக்க போதிய உறுப்பினர்கள் இல்லை.

ஆனால், அரசியலமைப்பு சட்டப்படி, அதிகார வரிசையில் அதிபருக்கு அடுத்தபடியாக தான் இருப்பதால் தன்னால் மட்டுமே இடைக்கால அதிபராக இருக்கமுடியும் என ஜீனைன் அனெஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் நாட்டில் தேர்தல் நடக்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஜீனைன் அனெஸ் தன்னை தானே இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டதற்கு முன்னாள் அதிபர் இவோ மோரலஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மிகப்பெரிய சதி என்றும், ஜீனைன் அனெஸ் ஆட்சிக்கவிழ்ப்பில் ஆர்வம் கொண்டவர் என்றும் அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே தலைநகர் லா பாஸ் மற்றும் சாண்டா குரூஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இவோ மோரலசின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 7 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து