சென்னை,
வருகிற சட்டமன்ற தேர்தலில் சென்னை மாவட்டத்துக்குட்பட்ட பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் வேட்பாளராக களம் காண்கிறார். தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கலை பெரம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேற்று முன்தினம் விஜய் தாக்கல் செய்தார்.
அதனைத்தொடர்ந்து தனது தேர்தல் பிரசாரத்தை பெரம்பூரில் தொடங்கினார். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிடும் வி.எஸ்.பாபுவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.
இதற்கிடையில், சென்னை வில்லிவாக்கத்தில் த.வெ.க. சார்பில் கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளாரன ஆதவ் அர்ஜுனா வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் வில்லிவாக்கம் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று வில்லிவாக்கத்தில் த.வெ.க. சார்பில் பிரசார பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வில்லிவாக்கம் ஜாயிண்ட் ஆபீஸ் அருகே பொது கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இருந்து மர்ம நபர்கள் சிலர் பொதுக்கூட்டத்துக்குள் மதுபாட்டில்களை வீசினர்.
இதில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பெண் தொண்டர் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த மது பாட்டில் வீச்சு சம்பவம் பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரத்துக்கு உரிய பாதுகாப்பு, பிரசாரத்தில் கலகம் விளைவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுச்செயலாளர் என். ஆனந்த், பொதுச்செயலாளர், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து மனு அளித்தனர்.