சென்னை,
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, ஆளுங்கட்சிக்கும், ஆண்ட கட்சிக்கும் மாற்றாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் புதிதாக மக்கள் நலக் கூட்டணி உதயமானது.
இந்தக் கூட்டணியில், தேமுதிக, தமாகா, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. முதல்-அமைச்சர் வேட்பாளராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார்.
தேர்தலில் படுதோல்வி
அந்தத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி சார்பில், தேமுதிக 105, மதிமுக 28, விடுதலை சிறுத்தைகள் கட்சி 25, தமாகா 26, இந்திய கம்யூனிஸ்டு கட்சி 25, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 25 என 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர். ஆனால், தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்கள் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
தேமுதிக தவிர ஏனைய கட்சிகள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே வாக்குகளை தேமுதிக 2.4, மதிமுக 0.9, விடுதலை சிறுத்தைகள் கட்சி 0.8, இந்திய கம்யூனிஸ்டு கட்சி 0.8, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 0.7, தமாகா 0.5 சதவீத வாக்குகளை பெற்றன. அதன்பிறகு, மக்கள் நலக் கூட்டணியே உடைந்துபோனது.
திமுக கூட்டணியில் ஐக்கியம்
10 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது நடைபெற உள்ள 17-வது சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்த 5 கட்சிகள் திமுக கூட்டணியில் ஐக்கியமாகியுள்ளன. அதாவது, தேமுதிக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் திமுக கூட்டணிக்கு வந்துவிட்டன.
ஜி.கே.வாசன் தலைமையிலான தமாகா மட்டும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. ஆனால், இந்தக் கட்சிகளுக்கு, அங்கம் வகிக்கும் கூட்டணியில் எத்தனை தொகுதிகள் கிடைக்கும்?, தேர்தலிலும் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? என்பது போக போகத்தான் தெரியும்.
அரசியலில் சாதாரணம்
'சூரியன்' படத்தில் நடிகர் கவுண்டமணி, "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா.." என்று காமெடியாக சொல்வார். அதுபோல், தேர்தலுக்கு தேர்தல் இப்படி கூட்டணி கணக்குகளும் மாறிக் கொண்டேதான் இருக்கின்றன.