அரசியல் களம்

கூட்டணி விவகாரம்: எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக கருத்து கேட்ட காங்கிரஸ்..?

திமுக கூட்டணியில் 25 இடங்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கிரிஷ் சோடங்கர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சியான தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பிரதான கட்சியான தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா ஆகியோர் தி.மு.க. பேச்சு வார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான பேச்சுவார்த்தை குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

காங்கிரசுடனான பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ் தரப்பில் விருப்பப்பட்டியல் வழங்கப் பட்டது. இதனை தி.மு.க. தலைமை பரிசீலனை செய்து வருகிறது. இருப்பினும் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் சிக்கல் நீடிப்பது போலவே தெரிகிறது. ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருவதாக செல்வப்பெருந்தகை மற்றும் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இருவருமே தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் 25 இடங்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நேற்று திட்டவட்டமாக கூறியுள்ளார். நாங்கள் கேட்டதை அவர்கள் (திமுக) கொடுக்க வேண்டும்; அவர்கள் கேட்டதை நாங்கள் கொடுத்து இருக்கிறோம் என கூறினார்.

இந்நிலையில், கூட்டணி குறித்து முடிவெடுக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக காங்.பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கருத்து கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என கருத்து தெரிவித்து இருப்பதாகவும், சிலர் மட்டுமே தவெகவுடன் கூட்டணி வைக்க கருத்து தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் திமுக கூட்டணியில் தொடர்வது குறித்து காங்கிரஸ் இன்று முக்கிய முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதுவாயினும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பின்னரே தெரியவரும். இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.