சென்னை,
சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. தேர்தல் நெருங்க, நெருங்க தமிழக அரசியல் களத்தில் நொடிக்கு, நொடி பரபரப்பு நிலவி வருகிறது. அரசியலில் நிரந்தர பகைவன் இல்லை என்பதற் கேற்பதான் கூட்டணிகள் மாறி, மாறி அமைந்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில், ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் தி.மு.க.வும், இழந்த ஆட்சியை பிடிக்க அ.தி.மு.க.வும் முழு வீச்சில் களம் இறங்கியுள்ளது.
இதற்கிடையே அரசியலில் புதிய வரவான த.வெ.க.வின் பாய்ச்சலும் அதிகமாக இருப்பதால் அரசியல் களத்தில் அனல் பறக்கிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு 26 கட்சிகளுடன் தி.மு.க. 'மெகா' கூட்டணியை அமைத்துள்ளது.
அ.தி.மு.க. - பா.ஜனதா அணியில் பா.ம.க., த.மா.கா., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கூட்டணியை பலப்படுத்த விஜய் தலைமையிலான த.வெ.க.வையும் இழுப்பதற்கான முயற்சியை பா.ஜனதா கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்தது. ஆனால் அந்த நேரத் தில் முயற்சி பலன் அளிக்கவில்லை.
இந்த நிலையில், கரூர் சம்பவம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணைக்கு 10-ந்தேதி (அதாவது நாளை) விஜய் ஆஜராக சம்மன் வந்துள்ளது. தற்போது பல்வேறு நிகழ்வுகள் இருப்பதால்தான் அந்த தேதியில் பங்கேற்க இயலாது என்றும் அடுத்த 10 நாட்களுக்கு பிறகு சி.பி.ஐ. குறிப்பிடும் தேதியில் பங்கேற்க இருப்பதாகவும், விஜய் தரப்பில் சி.பி.ஐ.க்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான் அதிமுக - பா.ஜனதா கூட்டணியில் தவெக இணைவதற்கான பேச்சுவார்த்தை டெல்யில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில், அதாவது, ஓரிரு நாளில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேச விஜய் டெல்லி செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
த.வெ.க. தங்கள் அணிக்கு வந்து விட்டால் நிச்சயமாக அது தி.மு.க. கூட்டணியை விட மெகா கூட்டணியாகவும், வெற்றி கூட்டணியாகவும் இருக்கும் என்று பா.ஜனதா கணக்கு போடுகிறது.
அந்த அரசியல் கணக்கு பலிக்கும் பட்சத்தில், அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணியில் த.வெ.க.வுக்கு 50 இடங்களும், விஜய்க்கு துணை முதல்-அமைச்சர் பதவியும் வழங்கப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதை முன்வைத்தே பேச்சுவார்த்தை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து கும்பகோணத்தில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தவெகவுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறுவது ஒரு வதந்தி... வதந்தி... தவெகவில் நாளை வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற உள்ள நிலையில் சிபிஐ சம்மன் அனுப்பியதற்கும், எங்களுக்கு (பாஜக) எந்த தொடர்பும் இல்லை. அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. பேச்சுவார்த்தை தொடங்கும்போது சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.