அரசியல் களம்

நாளை 7 தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளும் அண்ணாமலை

பொதுமக்கள் பெருந்திரளெனக் கூடி, தே.ஜ. கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டுமென அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை நாளை 7 தொகுதிகளில் தேஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளாது. இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து, நாளைய தினம் (16.04.2026), முதுகுளத்தூர், ராமநாதபுரம், அறந்தாங்கி, புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, திருவெறும்பூர் மற்றும் திருச்சி மேற்கு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில், பொதுமக்களை நேரில் சந்தித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறேன்.

ஊழல், நிர்வாகத் தோல்வி, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, குடும்ப ஆட்சி என, செயலற்ற தன்மையின் மொத்த உருவமாக இருக்கும் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்.

இருண்ட ஆட்சி அகன்று, நல்லாட்சி பிறந்திட, பொதுமக்கள் அனைவரும், பெருந்திரளெனக் கூடி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.