சென்னை,
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், இதே திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுக, 6 தொகுதிகளில் போட்டியிட்டது. தேர்தலில் தங்களுடைய பம்பரம் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்தும், திமுக வற்புறுத்தியதால், அக்கட்சியின் சின்னமான உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டது.
அதில், அரியலூர் (சின்னப்பா), மதுரை தெற்கு (பூமிநாதன்), வாசுதேவநல்லூர் (சதன் திருமலைக்குமார்), சாத்தூர் (ரகுராமன்) ஆகிய 4 தொகுதிகளில் மதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
கண்ணீர் விட்ட துரை வைகோ
தொடர்ந்து, நடைபெற்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது. அதில், போட்டியிட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ, "செத்தாலும் மதிமுகவின் சின்னமான பம்பரத்தில் தான் போட்டியிடுவேன்" என்று வேட்பாளர் அறிமுக கூட்டத்திலேயே அமைச்சர்கள் முன்னிலையில் கண்ணீர் மல்க கூறினார்.
ஆனால், தேர்தலில் அவருக்கு பம்பரம் சின்னம் கிடைக்கவில்லை, தீப்பெட்டி சின்னத்தைதான் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. அந்த சின்னத்திலேயே போட்டியிட்டு துரை வைகோ வெற்றி பெற்றார்.
தொகுதி பங்கீட்டில் மதிமுக கேட்டது?
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணியில் மதிமுக தொடரும் நிலையில், இந்த முறை 12 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. மேலும், பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்றும் கூறியது.
ஆனால், திமுக தலைமையோ, தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைக்கு வந்த மதிமுக நிர்வாகிகளிடம், ராஜ்ய சபா சீட் தரமுடியாது என்று மறுத்த அதே நேரத்தில், 12 தொகுதிகள் எல்லாம் கொடுக்க முடியாது, திமுகவின் சின்னமான உதயசூரியனில் போட்டியிட்டால் 4 தொகுதிகள், வேறு சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தால் 3 தொகுதிகள் கறாராக கூறிவிட்டது.
வைகோ அதிருப்தி
இதனால், அதிர்ச்சியடைந்த வைகோ, கடந்த சனிக்கிழமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசி, தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
என்றாலும், திமுக தலைமை மதிமுகவின் கோரிக்கைக்கு அசைந்து கொடுக்கவில்லை. இதனால், திமுக கூட்டணியில் மதிமுக அதிருப்தியுடனேயே தொடர்ந்து கொண்டு இருக்கிறது.