புதுடெல்லி,
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா மற்றுமொரு தேர்தல் திருவிழாவுக்கு தயாராகி வருகிறது.
நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப்பகுதிகளில் முக்கிய மாநிலங்களான தமிழ்நாடு. கேரளம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் மே மற்றும் ஜூன் மாதங்களில் முடிவடைகிறது.
இதில் தமிழ்நாடு சட்டசபை மே 10-ந்தேதியும், புதுச்சேரி சட்டசபை ஜூன் 15-ந்தேதியும் ஆயுட்காலத்தை நிறைவு செய்கின்றன.
எனவே இந்த மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதில் முக்கியமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிக ளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும் இந்த பணிகளை தேர்தல் கமிஷன் நிறைவு செய்து இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.
மேலும் சட்டசபை தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவது தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் உள்ளிட்ட தேர்தல் கமிஷனர்கள் அந்தந்த மாநிலங்களுக்கு நேரடியாக சென்று பல்வேறு தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தினர்.
குறிப்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்துறை அதிகாரிகளுடன் இந்த ஆலோசனை நடந்தது. மேலும் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அந்தந்த மாநில போலீஸ் அதிகாரிகளுடன் விவாதித்தனர்.
மாநிலங்களில் இந்த ஆய்வை முடித்த தேர்தல் கமிஷனர்கள் பின்னர் டெல்லியில் கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனால் எந்த நேரத்திலும் 5 மாநில தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி 234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு சட்டசபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
முன்னதாக புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
அங்கு வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 23-ந்தேதி வரை நடக்கிறது. வேட்புமனு பரிசீலனை 24-ந்தேதியும், அவற்றை திரும்பப்பெறுவதற்கான கடைசி நாள் 26-ந்தேதியும் ஆகும்.
மேற்கு வங்காள சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மேலும் கேரளம் மற்றும் அசாம் சட்டசபைகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
அசாமில் பாஜக ஆட்சியும், புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சியிலும் இருந்து வருகிறது. தமிழ்நாட்டைத் தவிர்த்து, கேரளம் மற்றும் மேற்கு வங்காளத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக 2026 சட்டமன்றத் தேர்தலில் மும்முரமாக இயங்கி வருகிறது.
இந்த நிலையில், கேரளத்தில் 47 இடங்களுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும், 294 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்காளத்தில் முதற்கட்டமாக 144 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
கேரளத்தில் 47 இடங்களுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதில் பல முக்கியத் தலைவர்களுக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது. முக்கிய வேட்பாளர்களில் மாநிலக் கட்சித் தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ராஜீவ் சந்திரசேகர், நேமம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவார். இந்தத் தொகுதியில் பாஜக மற்றும் சிபிஐஎம் இடையே நேரடிப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து, முன்னாள் மத்திய மந்திரி வி. முரளீதரன் கஜக்கோட்டம் தொகுதியில் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் சிபிஐஎம், இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பல தொகுதிகளில் மூத்த தலைவர்கள் போட்டியிடுகின்றனர். பாஜக தலைவர் கே.சுரேந்திரன் மஞ்சேஷ்வரிலும், ஷோபா சுரேந்திரன் பாலக்காடு தொகுதியிலும், வட்டியூர்காவு தொகுதியில் பாஜக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர். ஸ்ரீலேகாவும் போட்டியிடுகின்றனர்.
மற்றொரு முக்கிய வேட்பாளர் பத்மஜா வேணுகோபால். இவர், முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.கருணாகரனின் மகள் மற்றும் காங்கிரஸ் தலைவர் கே.முரளீதரனின் சகோதரி ஆவார். இவர், திருச்சூர் தொகுதியில் பாஜகவால் நிறுத்தப்பட்டுள்ளார். இவர்களைத் தவிர, 2024 மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி வதேராவை எதிர்த்து வயநாட்டில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸுக்கும் கட்சி டிக்கெட் வழங்கியுள்ளது.
அவர், கோழிக்கோடு வடக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். பாஜகவின் இந்த முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியலால், கேரளத்தில் காங்கிரஸ் மற்றும் சிபிஐஎம் ஆகிய 3 கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, வரவிருக்கும் கேரள சட்டமன்றத் தேர்தலில் சிபிஐஎம் 86 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தது. அதில், 56 ஆளும் கட்சி எம்எல்ஏக்களையும் மீண்டும் பரிந்துரைத்துள்ளது. முதல்-மந்திரி பினராயி விஜயன் மீண்டும் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தர்மடம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
கேரளத்தை தொடர்ந்து 294 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்கத்தில் முதற்கட்டமாக 144 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. இதில், அம்மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சுவேந்து அதிகாரி நந்திகிராம் மற்றும் பபானிபூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்டு அவரை தோற்கடித்தவர் சுவேந்து அதிகாரி. அதேபோல், மம்தா பானர்ஜி தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் பபானிபூர் தொகுதியிலும் சுவேந்து அதிகாரியை வேட்பாளராக களம் இறங்குகிறார்.
அதேபோல ராஷ்பெஹாரி தொகுதியில் முன்னாள் மாநிலங்களவை எம்.பி ஸ்வபன் தாஸ்குப்தா போட்டியிடுகிறார்.
கலிகஞ்சில் இருந்து பாபன் கோஷ், டயமண்ட் ஹார்பரில் இருந்து தீபக் குமார் ஹல்டர், அசன்சோல் தக்ஷினில் இருந்து அக்னிமித்ரா பால், அசன்சோல் உத்தரில் கிருஷ்ணேர்ஜேந்துவும், ஹன்சனில் நிகில் பானர்ஜியும், கூச்பெஹார் உத்தரில் சுகுமார் ராய் மற்றும் சிலிகுரியில் சங்கர் கோஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
முன்னதாக வேட்பாளர் பட்டியல் தொடர்பாக பிரதமர் இல்லத்தில் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஜே.பி.நட்டா, மேற்கு வங்க கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் பிப்லப் தேப் மற்றும் வங்காள பாஜக தலைவர் சாமிக் பட்டாச்சார்யா, எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, மாநில பாஜக முன்னாள் தலைவர் சுகந்தா மஜும்தார் உள்ளிட்ட மாநிலப் பிரிவைச் சேர்ந்த பல மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மத்திய மந்திரி சாந்தனு தாக்கூர், பாஜக எம்பி மனோஜ் திக்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.