அரசியல் களம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 4-ம் கட்ட பிரசாரம் தஞ்சாவூரில் நாளை மறுநாள் தொடக்கம்

12-ம் தேதி தூத்துக்குடியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அவர் தனது பிரசாரத்தை கடந்த மாதம் 31-ந்தேதி அவரது சொந்த ஊரான திரு வாரூரில் இருந்து தொடங்கினார்.

ஏற்கனவே 2 கட்ட பிரசாரத்தை முடித்த அவர் 3-வது கட்ட பிரசாரத்தை புதுச்சேரியில் நேற்று முன்தினம் தொடங்கினார். நேற்று (செவ்வாய்க்கிழமை) மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இன்று காலை திருவண்ணாமலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

இந்த நிலையில், 4-ம் கட்ட பிரசாரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூரில் நாளை மறுநாள் (10-ந்தேதி) தொடங்குகிறார். அன்று மாலை 5 மணிக்கு தஞ்சாவூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், திருவிடைமருதூர். கும்பகோணம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார்.

11-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு புதுக்கோட்டையில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கந்தர்வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார்.

அதேநாளில் இரவு 7 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார்.

12-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு பரமக்குடியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய தொகுதிகளிலும், இரவு 7 மணிக்கு விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார்.

பிரசாரத்திற்கு குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டியுள்ளதால், காலத்தின் அருமை கருதி எக்காரணம் கொண்டும் திமுக நிர்வாகிகள் வழியில் வேறு எவ்வித நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டாமென திமுக தலைமை கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. நிர்வாகிகள் அனைவரும் மு.க.ஸ்டாலின் தங்கும் இடத்திற்கு வருவதை தவிர்த்து, பிரசாரக் கூட்டத்திற்கு நேரடியாக வருகை தர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.