அரசியல் களம்

திருச்சி திமுக மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ரேம்ப் வாக்’

தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தல் ரேசில் முன்னணியில் உள்ளது.

திருச்சி,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி அமைத்தும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன. த.வெ.க.வின் நிலைப்பாடு இன்னமும் முடிவாகவில்லை. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வில் ஏறக்குறைய கூட் டணி இறுதியாகி விட்டது. இதில் ஆளும் தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தல் ரேசில் முன்னணியில் உள்ளது. கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் வேலையில் அக்கட்சி தீவிரமாக உள்ளது.

இதற்கிடையே 'மு.க.ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்' என்ற தலைப்பில் தி.மு.க. நிர்வாகிகள் மாநில மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு கலைநிகழ்ச்சிகளுடன் மதியம் 3 மணிக்கு தொடங்கியது.

மாநாட்டு திடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 6.40 மணியளவில் வந்தார். அப்போது 110 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார். அவர் மாநாட்டு மேடைக்கு வருவதற்காக அரை கிலோமீட்டர் தொலைவுக்கு 'ரேம்ப்' வாக் அமைக்கப்பட்டது. அதில் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கம்பீரமாக கையசைத்தபடி நடந்து சென்றார். அப்போது தொண்டர்கள் கரகோஷங்களை எழுப்பினர்.

பின்னர் மாநாட்டு மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கலைஞர் படங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட நிர்வாகிகள் வெள்ளி செங்கோல், வெற்றிவாள் உள்ளிட்ட நினைவுப் பரிசுகளை வழங்கினர். அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றி வருகிறார்.