சென்னை,
தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க., 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளது. கூட்டணியில் உள்ள தேசிய கட்சியான காங்கிரசுக்கு 28 தொகுதிகளை கொடுத்துள்ளது. இதில், 11 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என அடையாளம் காணப்பட்டுவிட்டாலும், 17 தொகுதிகளில் இழுபறி நிலை நீடிக்கிறது.
அதாவது, பொன்னேரி, உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, சிவகாசி, நாங்குநேரி, குளச்சல், வேளச்சேரி, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், கடலூர், சோளிங்கர், பென்னாகரம், உசிலம்பட்டி, மேலூர் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர் தேர்வில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தமிழக காங்கிரஸ் தலைவர் தயாரித்தாலும், அதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமைதான் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
ஆனால், காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே பல கோஷ்டிகள் இருப்பதால், அனைத்து தலைவர்களும் டெல்லியில் முகாமிட்டு, தங்களுடைய ஆதரவாளர்களுக்கு சீட் கேட்டு வருகின்றனர். அதே நேரத்தில், பணம் பெற்றுக்கொண்டு வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக, கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு புகார் சென்றதாகவும், அதனால் அவர் கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில்தான் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்ய காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் காங்கிரஸ் தலைவர் கார்கே, மக்களவைத் தலைவர் ராகுல்காந்தி, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
கூட்டத்தில் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வேட்பாளர்களை பரிந்துரை செய்வதற்கான ஸ்கிரீனிங் கமிட்டியின் கூட்டம் நேற்று இரவு 10 மணிக்கு டெல்லியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.