சென்னை,
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. தொகுதி பங்கீடு குழு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
முதல்நாளான நேற்று முன்தினம் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2-வது நாளான நேற்று வைகோவின் மதிமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதேபோல் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு, அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தியது. இதனால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இது சம்பந்தமாக காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகியது.
இந்தநிலையில், கடந்த 22-ந் தேதி பின்னர் காங்கிரஸ் தலைவர்கள், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு சென்றனர். அங்கு கே.சி.வேணுகோபால், டி.எஸ்.சிங் தியோ ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி உடனிருந்தார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.
முதல்-அமைச்சருடனான சந்திப்பின்போது, காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் எண்ணிக்கை மற்றும் தொகுதிகளின் விவரங்கள் அடங்கிய கடிதத்தை கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் அல்லது கனிமொழி எம்.பி டெல்லியில் காங்கிரஸ் அகில இந்திய தலைமையுடன் பேசுவார்கள் என்று தெரிகிறது.
அதைத்தொடர்ந்து கிரிஷ்சோடங்கர் தலைமையிலான காங்கிரஸ் பேச்சு வார்ததை குழுவினர் தி.மு.க. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவை விரைவில் சந்திப்பார்கள் என்று தெரிகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு 27 சட்டமன்ற தொகுதிகளும், டெல்லி மாநிலங்களவை எம்.பி. பதவி ஒன்றும் தி.மு.க. தரப்பில் கொடுக்கலாம் என்று தெரிகிறது.
இந்த நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் 30 தொகுதிகளுக்கு மேல் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் இம்முறை 30-க்கு மேல் வழங்க வலியுறுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. மாநிலங்களவை பதவி ஒன்று கேட்பதாக கூறப்படுகிறது.
இதைபோல உள்ளாட்சி மேயர் பதவிகள் குறித்தும் திமுகவிடம் காங்கிரஸ் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த தேர்தலை விட காங்கிரசுக்கு 2 அல்லது 3 தொகுதிகளை திமுக கூடுதலாக வழங்க வாய்ப்பு உள்ளது. சட்டமன்ற தேர்தல் மட்டுமின்றி மாநிலங்களவை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் பங்கீட்டையும் முடிக்க காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ம.தி.மு.க.வுக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புதிதாக ஐக்கியமாகி இருப்பதால் கூட்டணி கட்சிகளுக்கு கடந்த தேர்தலை விட தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து வழங்க தி.மு.க. திட்டமிட்டுள்ளது. எனவே ம.தி.மு.க.வுக்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்கும் மனநிலையில் தி.மு.க. இருப்பதாக தெரிகிறது. மேலும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.