அரசியல் களம்

ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என்பது ஏமாற்று யுக்தி - நடிகை விந்தியா

தமிழக தேர்தல் வரலாற்றில் தி.மு.க. 5 ஆண்டு ஆட்சிக்கு பிறகு மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்ததே இல்லை என நடிகை விந்தியா கூறியுள்ளார்.

சேலம்,

சேலம் எடப்பாடியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக நட்சத்திர பேச்சாளர் நடிகை விந்தியா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது

திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு முற்றிலும் இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சிறுமி முதல் முதாட்டி வரையிலான அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லா சூழல் உருவாகியுள்ளது.

தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிர் உரிமை தொகை திட்டமானது பெண்கள் மீது அக்கறையில் கொண்டு வரப்பட்ட திட்டம் இல்லை அவர்களது வாக்குகளை பறிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டது.

புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரியில் 3 ஆண்டு படிக்கும் மாணவிக்கு மொத்தம் 36 ஆயிரம் ரூபாய் மட்டுமே தி.மு.க அரசால் வழங்கப்படுகிறது. ஆனால் அ. தி.மு.க ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட இளம் பெண்களுக்கான தாலிக்கு தங்கம் திட்டத்தில் 1 சவரன் தங்கம் வழங்கப்பட்டது. தங்கத்தின் விலையோடு ஒப்பீடு செய்து இதில் எது சிறந்தது என இளம் பெண்கள் தீர்மானிக்க வேண்டும்.

மேலும் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.8 ஆயிரத்திற்கான கூப்பன் என்பது ஒரு ஏமாற்று யுக்தி.

இதில் எந்த ஒரு தரமான வீட்டு உபயோக பொருளும் வாங்க முடியாது. தனியார் நிறுவனங்களின் லாப நோக்கினை கணக்கில் கொண்டு இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஏமாற்று திட்டங்களை தமிழக வாக்காளர்கள் நம்பி விடக்கூடாது.

தமிழக தேர்தல் வரலாற்றில் தி.மு.க. 5 ஆண்டு ஆட்சிக்கு பிறகு மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்ததே இல்லை.

இந்நிலையில் சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து வந்த அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாதாரண மக்களின் நிலையை உணர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலான சிறப்பான ஆட்சியை வழங்குவார் என்பது உறுதி.

எடப்பாடி பழனிசாமி அவர்களால் எடப்பாடி தொகுதியில் ஏற்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை பட்டியலிட்டு இதுபோன்ற திட்டங்களால் தொகுதி மேலும் வளர்ச்சி பாதையில் செல்ல வாக்காளர்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அ.தி.மு.க வேட்பாளர்களை மாபெரும் வெற்றியடைய செய்ய வேண்டும் .

இவ்வாறு அவர் பேசினார்.