சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அ.தி.மு.க. அங்கம் வகித்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியிலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதற்கிடையே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2-ம் தேதி திடீரென டெல்லி சென்றார். அங்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் தமிழகத்தின் தேர்தல் அரசியல் பற்றி அவர்கள் விரிவாக விவாதித்தனர். அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு விவரங்களை எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவிடம் தெரிவித்திருக்கிறார்.
தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் தன்னிடம் தந்த தொகுதி பட்டியலில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். கடந்த தேர்தலில் செய்யப்பட்ட தொகுதி பங்கீடு விவரங்களையும்,
தற்போது செய்யப்பட்டு இருக்கும் பங்கீடு விவரங்களையும் அமித்ஷா ஒப்பிட்டுப் பார்த்து பா.ஜனதாவுக்கான தொகுதிகளை இறுதி செய்ததாக கூறப்படுகிறது. அதுபோல பா.ம.க., அ.ம.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகளை ஆராய்ந்து அதில் சிறு மாற்றங்களையும் அமித்ஷா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு இறுதியாகாததால் பாமகவிற்கான தொகுதிகளை ஒதுக்குவதில் தாமதம் எற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாங்கள் விரும்பும் 30 தொகுதிகள் அடங்கிய விருப்ப பட்டியலை எடப்பாடி பழனிசாமியிடம் அன்புமணி தரப்பு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சேலம் மற்றும் தர்மபுரியில் தலா 2 தொகுதிகளை பாமகவிற்கு ஒதுக்க அன்புமணி வலியுறுத்தி உள்ளதாகவும், பாமகவினர் எம்.எல்.ஏ.க்களாக உள்ள மயிலம் மற்றும் மேட்டூர் தொகுதிகளை அதிமுக கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.