அரசியல் களம்

எங்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை: அதிமுக தலைமை மீது மாவட்ட செயலாளர்கள் அதிருப்தி

நமக்குள் இருக்கும் மனஸ்தாபங்களை ஓரமாக வைத்துவிட்டு தேர்தல் பணியாற்றுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.

சென்னை,

சட்டசபை தேர்தல் பரபரப்புக்கு இடையே அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பணிகளில் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

'விடியா ஆட்சி; உங்கள் வீட்டு பில்லே சாட்சி' என மின் கட்டண உயர்வு குறித்த பிரசாரத்தை நாம் தொடங்கியுள்ளோம். ஆனால், பல மாவட்ட செயலாளர்கள் இதை கண்டுகொள்ளவில்லை. அதை தீவிரமாக செயல்படுத்துங்கள். நீங்கள் எதிர்பார்த்த கூட்டணியை அமைத்து கொடுத்துவிட்டேன். இனியும் எதற்காக தாமதிக்கிறீர்கள். நமக்குள் இருக்கும் மனஸ்தாபங்களை ஓரமாக வைத்துவிட்டு தேர்தல் பணியாற்றுங்கள்.

தேர்தல் பணிகளில், கூட்டணி கட்சியினரையும் இணைத்து கொள்ளுங்கள். இன்னும் சில மாவட்டங்களில் பூத் கமிட்டியே அமைக்காமல் இருக்கிறீர்கள். தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் தான் உள்ளன. இனியும் அலட்சியமாக இருக்க வேண்டாம். ஆட்சி அதிகாரம் கையில் இருந்தாலும், தி.மு.க. மீது மக்கள் அதிருப்தியாக உள்ளனர். அதை நமக்கு சாதகமாக்க வேண்டும். தி.மு.க.வுக்கு எதிராக தைரியமாக களத்தில் நில்லுங்கள். உங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய, தலைமை தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

ஆனால், கூட்டம் முடிந்து வெளியே வந்த மாவட்ட செயலாளர்களில் சிலர், அ.தி.மு.க. தலைமை மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். "மின் கட்டணம் குறித்து மக்களிடம் பில் எடுத்துக் கொடுக்க சொல்கிறார்கள். ஆனால், ஒரு பில் எடுக்கவே 20 நிமிடங்கள் வரை ஆகிறது. வடசென்னையை சேர்ந்த மாவட்ட செயலாளர் ஒருவர் பூங்கா புனரமைப்பு பணிகள் சரியில்லை என்று வீடியோ எடுத்து வெளியிட்டார்.

அவர் மீது அரசு சொத்தை சேதப்படுத்தியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை. கட்சி தலைமையே எங்களுக்கு ஒத்துழைப்பு தராதபோது, நாங்கள் எப்படி தேர்தல் பணியில் ஈடுபட முடியும்" என்று தங்களுடைய மனக்குமுறலை வெளிப்படுத்தினர்.