அரசியல் களம்

22 ஆம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை; தி.மு.க அறிவிப்பு

கூட்டணி கட்சிகளுடன் வருகிற 22-ந்தேதி முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீட்டு குழு ஈடுபடும் என்று தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நடைபெற உள்ள 2026 சட்டசபை தேர்தலுக்கான களப்பணிகளில் கட்சி தொண்டர்கள் சுற்றிச்சுழன்று பணியாற்றி வருகின்றனர். வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த நடவடிக்கை நிறைவடைந்து இருக்கிறது. இதற்காக மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள், பகுதி-நகர-ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணியினர், வாக்குச்சாவடி முகவர்கள், குழுவினர் என லட்சக்கணக்கானோர் கடந்த சில வாரங்களாக தீவிர பணியாற்றி வந்துள்ளனர்.'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை, 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி', மேற்கு மற்றும் வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு, டெல்டா மற்றும் தெற்கு மண்டல மகளிரணி மாநாடு என வெற்றிக்கனி பறிப்பதற்கான அடிப்படை பணிகளை அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறார்கள்.

இனிவரும் நாட்களில் வீடு வீடாக வெல்லும் தமிழ்பெண்கள் பரப்புரையை மகளிர் படை மேற்கொள்ள இருக்கிறது. மேலும் வாக்குச்சாவடி குழுவினருக்கு 4 பயிற்சி மாநாடுகள், திருச்சியில் 'ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்' மாநாடு என இடைவிடாத களப் பணிகள் ஒரு புறமும், திராவிட மாடல் அரசின் மூலம் அடுக்கடுக்கான நலத்திட்டங்களின் அமலாக்கம் மறுபுறமும் ஒவ்வொரு நாளும் நடந்து வருகின்றன.தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு அமைக்கப்பட்டு அக்குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் அறிந்து வருகின்றனர். இதுவரையிலும் 75,000 கோரிக்கைகளும், பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளன.

வருகிற 17-ந்தேதி தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து அதன் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. தி.மு.க. தலைவரால் விரைவில் அமைக்கப்பட உள்ள தொகுதி பங்கீட்டு குழுவானது சட்டசபை அலுவல்கள் நிறைவடைந்தவுடன், வருகிற 22-ந்தேதி முதல் தோழமை கட்சிகளுடன் தொகுதி பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தொகுதி பங்கீட்டு குழு பேச்சுவார்த்தையை அமைக்காமல் தாமதப்படுத்துவது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். ராகுல் காந்தியை இன்று தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து பேசிய பின்னர் அளித்த பேட்டியிலும் இது தொடர்பாக பேசியிருந்தனர். இந்த நிலையில்தான் பேச்சுவார்த்தைக்குழுவை திமுக அமைத்துள்ளது.