கோப்புப்படம் 
அரசியல் களம்

தொகுதி பங்கீடு தொடர்பாக மக்கள் நீதி மய்யத்துடன் தி.மு.க. இன்று பேச்சுவார்த்தை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக மக்கள் நீதி மய்யத்துடன் திமுக இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.

சென்னை,

தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளது. டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைத்து, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. காங்கிரஸ் உட்பட 9 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 2 கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (ஐயூஎம்எல்), மனிதநேய மக்கள் கட்சி (மமக) ஆகிய கட்சிகளுடன் திமுக குழுவினர் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இந்த தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. முஸ்லீம் லீக் 'ஏணி' சின்னத்திலும், மமக 'உதயசூரியன்' சின்னத்திலும் போட்டியிட உள்ளது.

மேலும் இந்திய கம்யூனிஸ்டு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, சமத்துவ மக்கள் கழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது. காங்கிரஸ் கட்சி கூடுதல் இடங்களை கேட்டு விடாபிடியாக இருப்பதால் அந்த கட்சியுடன் மட்டும் இழுபறி நீடிக்கிறது. தி.மு.க. கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள தே.மு.தி.க.விடம் நேரடி சட்டமன்ற தொகுதிகள் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. தே.மு.தி.க.வுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவி ஒதுக்க வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் தான் இந்த கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது.

இந்த சூழலில் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் (வியாழக்கிழமை) நிறைவடைய இருக்கும் நிலையில் தே.மு.தி.க.வுக்கு ஒரு இடம் நேற்று அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக மக்கள் நீதி மய்யத்துடன் தி.மு.க. இன்று (புதன் கிழமை) பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.