சென்னை,
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் வருகிற 30-ம் தேதி தொடங்குகிறது. ஓட்டு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடக்கிறது.
தமிழகத்தில் மொத்தம் 5. 67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியேற்றுள்ளது. அதில் தமிழ்நாடு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தாலும் தகுதி உள்ள புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை சேர்க்க தேர்தல் ஆணையம் கூடுதல் வாய்ப்பினை வழங்கியுள்ளது.
அதன்படி, வேட்புமனுத் தாக்கல் செய்ய நிர்ணயிக்கப்பட்ட இறுதி தேதிக்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலுக்கான இறுதிநாள் ஏப்ரல் 6-தேதியாகும். எனவே அதற்கு முன்பு 10 நாட்கள் என்றால் மார்ச் 27ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவும் சம்பந்தப்பட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் அவ்வாறு உரிய காலக்கெடுவிற்குள் விண்ணப்பிப்பவர்களின் பெயர்கள் துணை பட்டியலில் சேர்க்கப்படும் என்பதால் அவர்களால் அந்த தேர்தலில் வாக்களிக்க முடியும்.
புதிய வாக்காளராக பதிவு செய்ய விரும்புகிறீர்களா?
voters.eci.gov.in என்ற இணையதளத்தில் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து, உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்துகொள்ளுங்கள் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா?
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதை voters.eci.gov.in என்ற இணையதளம் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். voters.eci.gov.in இணையதளத்தில் Search your Name in vote List-செய்து தேவையான விவரங்களை கொடுத்து உங்களது பெயரை சரிபார்த்துக் கொள்ளலாம்.