திருச்சி,
திருச்சி திமுக மாநில மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தந்தை பெரியாரால் கொள்கை உரம் பெற்று, பேரறிஞர் அண்ணாவால் பக்குவப்படுத்தப்பட்டு, தமிழினத் தலைவர் கலைஞரால் வழிநடத்தப்பட்ட நாம்தான் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆளவேண்டும் என்று உறுதியேற்போம்.
தமிழினத்தைக் காக்க தகுதியும், திறமையும், உழைப்பும் கொண்ட ஒரே படை, நம் கருப்பு - சிவப்பு படைதான். தமிழ்நாட்டிற்கு பெயர் வைத்ததும், தமிழ்நாட்டை உயர்த்தியதும், தமிழ்நாட்டுக்கு காவல் அரணாக இருப்பதும் நாம்தான். தமிழ்நாட்டைத் தொடர்ந்து புறக்கணிக்கிற மத்திய பா.ஜ.க அரசின் தரவுகள் கூட ‘நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு’ என பறைசாற்றுகிறது. உலக பத்திரிகைகளே ‘Superstar State Tamil Nadu’ என பாராட்டி வருகிறது.
திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து துறைகளும் இரட்டிப்பு மடங்கிற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்து, சாதனை படைத்துள்ளது. அதனால்தான், வரலாற்றிலேயே இல்லாத வகையில், 14 ஆண்டுகளுக்கு பிறகு நம் ஆட்சியில் 11.19 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்திருக்கிறது.
அ.தி.மு.க கூட்டணி என்றால் மோடியும் அமித்ஷாவும் கோபப்படுவார்கள். என்.டி.ஏ. கூட்டணி என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி, கூட்டணிக்கு பெயர் கூட வைக்க முடியாத நிலையில்தான் அ.தி.மு.க இருக்கிறது. தமிழ்நாட்டிற்கான திட்டங்களை தேர்தலுக்காக கூட அறிவிக்க மத்திய பா.ஜ.க ஆட்சியாளர்களுக்கு மனமில்லை. நாம் கேட்பதை எல்லாம் ‘நோ’ என்று சொல்லும் என்.டி.ஏ.விற்கு தமிழ்நாடு எப்போதும் ‘நோ’ தான் சொல்லும். டப்பா இஞ்சினுக்கு இங்கே எப்போதும் அனுமதி இல்லை.
தன் சொந்த நலனுக்காக எடப்பாடி பழனிசாமி அடிமையாக இருக்கிறார். இப்போது கூட பீகாரில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். நிதிஷ் குமாரின் தேவையே முடிந்ததும், அவரை கழற்றிவிட்டு பா.ஜ.க ஆட்சி செய்யப் பார்க்கிறது. தமிழ்நாட்டிலும் அதையே செய்ய முயற்சிக்கிறது. ஆனால் தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு ‘அவுட் ஆப் கண்ட்ரோல்’ தான்.
நாங்கள் பார்க்காத படையெடுப்பா, திமுக பார்க்காத மிரட்டலா?. எந்த பல்டி அடிச்சாலும் பா.ஜ.க-வால் தமிழ்நாட்டை ஆளமுடியாது. எத்தனை கட்சிகளை முகமுடி போட்டு கூட்டு வந்தாலும் உங்களால் ஒருபோது கருப்பு சிவப்பு படையை வெல்ல முடியாது. எங்கள் மண்ணில் நாங்க தான் ஜெயிப்போம்.
அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் அறிக்கைக்கு கண்டெண்ட் கொடுப்பதே இந்த மு.க.ஸ்டாலின் அறிவிக்கும் திட்டங்கள்தான். தமிழ்நாட்டை எப்படியாவது விழுங்கிவிடலாம் என பா.ஜ.க நினைக்கிறது. கருப்பு - சிவப்பு பட்டாளம் இருக்கும் வரை அது நடக்காது. உங்கள் அப்பனே வந்தாலும் நடக்காது.
தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்று நான் கேட்டேன். உடனே எதிரிகள் 'இது சட்டமன்ற தேர்தல் தானே; ஏன் டெல்லி தமிழ்நாடு என்று சொல்கிறார்கள்?' என்று கேட்கிறார்கள்.
அ.தி.மு.க. என்னும் முகமூடியை போட்டுக்கொண்டால் பா.ஜ.க-வின் அடையாளம் தெரியாமல் போய்விடுமா? உங்கள் முகத்திரையை நாங்கள் கிழிப்போம். கருப்பு சிவப்பு படை இருக்கும் வரை உங்கள் எண்ணம் தமிழ்நாட்டில் நிறைவேறாது.
தேர்தலுக்காக உழைக்க, நான் ரெடி... நீங்கள் ரெடியா? நம் மண்- மொழி- மக்களை காக்க, நான் ரெடி... நீங்கள் ரெடியா? திராவிட மாடல் 2.0-விற்கு, நான் ரெடி... நீங்கள் ரெடியா? நம்முடைய வெற்றி, கழகத்தின் வெற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் வெற்றி! அதை உணர்ந்து நீங்கள் உழைக்க வேண்டும்! ஏழாவது முறையும் நாம்தான்! இனி எப்போதும் நாம்தான்! திருச்சியின் எழுச்சி தமிழ்நாடெங்கும் பரவட்டும்! திராவிட மாடல் நல்லாட்சி தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! மீண்டும் வெல்வோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்! வெல்வோம் . இவ்வாறு அவர் கூறினார்.