அரசியல் களம்

நெருங்கும் தேர்தல்: இன்று முக்கிய முடிவுகளை எடுக்கும் சசிகலா

சசிகலா முடிவுக்கு எதிராக டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது பேசும் பொருளாக மாறியது.

சென்னை,

சட்டசபை தேர்தல் நெருங்க, நெருங்க தமிழக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு அரங்கேறி வருகிறது. அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. இணைந்த பிறகு, சசிகலா எடுத்து வரும் நடவடிக்கை அரசியல் அரங்கை திரும்பி பார்க்க வைத்து வருகிறது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு என்ற முழக்கத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கியபோது, அவருக்கு ஆதரவு நிலைப்பாட்டை சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் எடுத்தனர். ஆனால், சசிகலா முடிவுக்கு எதிராக டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது பேசும் பொருளாக மாறியது.

இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி-டி.டி.வி. தினகரனுக்கு எதிராக நேரடி அரசியல் களம் காண சசிகலா திட்டமிட்டு வருகிறார். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளில் தனது சார்பில் வேட்பாளர் களை நிறுத்தவும் அவர் முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் ஜெயலலிதா பிறந்தநாள் நலத்திட்ட விழாவுக்கு சசிகலா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சசிகலா பல முக்கிய முடிவுகளை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக, அம்மா அ.தி.மு.க. என்ற புதிய கட்சியை சசிகலா தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அம்மா அ.தி.மு.க. என்ற பெயரிலே தேர்தலை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். சசிகலா தொடங்க இருக்கும் கட்சியில் ஓ.பன்னீர்செல்வம் இணைவாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

அதே நேரத்தில் நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க.வுடன் சசிகலா தலைமையில் உருவாக இருக்கும் அம்மா அ.தி.மு.க. கூட்டணி அமைக்கும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.