கோப்புப்படம் 
அரசியல் களம்

அதிமுக கூட்டணியில் 8 தொகுதிகளை கேட்கும் ஜி.கே.வாசன்

கடந்த சட்டசபை தேர்தலில் தமாகாவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

சென்னை,

கடந்த (2021) சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமாகாவுக்கு பட்டுக்கோட்டை, திரு.வி.க.நகர், ஈரோடு கிழக்கு, லால்குடி, தூத்துக்குடி, கிள்ளியூர் ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், ஒரு இடத்தில் கூட தமாகா வெற்றி பெறவில்லை.

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் தமாகா தொடரும் நிலையில், இந்த முறை 8 தொகுதிகளை கேட்டு வருகிறதாம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். அப்போது தமாகா போட்டியிட விரும்பும் 12 தொகுதிகள் பட்டியலை அவரிடம் வழங்கியுள்ளார். அதில் 8 தொகுதிகள் ஒதுக்கித்தருமாறும் கேட்டுக்கொண்டார்.

தமாகாவுக்கு 5 தொகுதிகள்

அப்போது, ஜி.கே.வாசனுடன் சென்ற தொழிலதிபர் ஒருவர், ஜி.கே.வாசனுக்கு ராஜ்யசபா சீட்டும் கொடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு எடப்பாடி பழனிசாமியோ, சட்டசபை தேர்தலில் 5 தொகுதிகளை தமாகாவுக்கு ஒதுக்குவதாகவும், ராஜ்யசபா சீட்டை அடுத்த ஆண்டு தருவதாகவும் தெரிவித்துவிட்டாராம்.

தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை இவ்வாறு நடந்து கொண்டிருக்கும் நிலையில், தமாகாவுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு ஜி.கே.வாசன் கடிதமும் எழுதியுள்ளார்.

Also read:கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடைய முடியாது - கூட்டணி குறித்து ராமதாஸ் சூசகம்