அரசியல் களம்

சீட்டுக்கும், நோட்டுக்கும் யார்கிட்டயும் கை கட்ட மாட்டேன் - சீமான் அதிரடி பேச்சு

நீ எனக்கு ஓட்டு போட்டால் போடு இல்லைனா போ என சீமான் கூறியுள்ளார்.

பெரம்பலூர்,

பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது தமிழக சட்டசபை தேர்தல் களம். இதுவரை அடுத்தடுத்து இரண்டு முறை திமுக ஆட்சி அமைத்ததில்லை என்ற மோசமான சாதனையை தகர்க்க மிக பெரும் கூட்டணி பலத்தோடு களமிறங்கி இருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

மறுபுறம் அடுத்தடுத்து இரண்டு முறை தோற்றதில்லை என்ற சாதனையை தக்க வைக்க போராடி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அவரது அணியிலும் பத்துக்கும் மேற்பட்ட கூட்டணி கட்சிகள் இருக்கிறது.

இந்த நிலையில் தமிழக அரசியலின் புதிய வரவாகவும் முதல் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் விஜய் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்ததோடு தானும் இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். இது தவிர வழக்கம் போல் தனித்துப் போட்டி என 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார் நாம் தமிழர் கட்சியின் சீமான். தற்போது தமிழக அரசியலில் நான்கு முனை போட்டியே நிலவுகிறது.

இந்தநிலையில், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரம்பலூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

எனக்கு முன்னாடி 2 இருந்துச்சி.. பதவியா? அல்லது மக்களுக்கான உதவியா? பணமா அல்லது பிறந்த இனமா? பதவியா? உதவியா? கேட்ட உதவி..தான் நீ எனக்கு ஓட்டு போட்டால் போடு இல்லைனா போ, உடம்புல தெம்பு இருக்கிற வர இதே இடத்துல நின்னு கத்தி கத்தி செத்துக்கூட போவேன் ஆனா சீட்டுக்கும் நோட்டுக்கும் யார்கிட்டயும் கை கட்ட மாட்டேன்; சரணடைந்து வாழ்வதற்கு சண்டையிட்டு சாவதே மேல். உயிரை இழக்கலாம். உரிமையை இழக்க கூடாது.

உயிரனது மேலானது நமது உரிமை. மண்டியிட்டு வாழ்வதற்கு மாண்டுவிட்டு போகலாம். இதுதான் உங்கள் பிள்ளைகளின் நிலைபாடு.நான்கு பக்கமும் எதிரிகள் இருக்கிறார்கள். நடுவில் நாம் தமிழர் கட்சி இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும் என்றார்.