அரசியல் களம்

மகளிர் உரிமை தொகை தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது மூடநம்பிக்கை - பிரவீன் சக்கரவர்த்தி

மகளிர் உரிமைத் தொகை குறித்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் பிரவீன் சக்கரவர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த சூழலில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது" என பேசியிருந்தார். அதே சமயம், காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணி தொடரும் என்றும் அவர் கூறியிருந்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த கருத்து தொடர்பாக மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் பிரவீன் சக்கரவர்த்தி, தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டத்தக்கது.

ஆனால், அது மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை.

கடந்த 3 ஆண்டுகளில், தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில், 4 மட்டுமே வெற்றி பெற்றன. 5 தோல்வியடைந்தன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்புதான் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.