சென்னை,
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான கனிமொழி, கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, 2024-ம் ஆண்டு தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக உள்ளார்.
அதற்கு முன்பு 2007-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக கனிமொழி இருந்துள்ளார். தற்போது, தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, தேசிய அரசியலை விட்டு மாநில அரசியலுக்கு வர கனிமொழி எம்.பி. முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தற்போதைய திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், தனது உடல்நிலையை காரணம் காட்டி வரும் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கட்சித் தலைமையிடம் கூறியதாக தெரிகிறது.
இவர், அ.தி.மு.க. சார்பில் 2001, 2006-ம் ஆண்டுகளிலும், தி.மு.க. சார்பில் 2010, 2011, 2016, 2021-ம் ஆண்டுகளிலும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.
இந்த முறை, திருச்செந்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி களம் காண்பார் என்று தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
சமீபத்தில் திருச்செந்தூரில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள், "அனிதா ராதாகிருஷ்ணனை லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்" என்று பேசியுள்ளனர். அப்போது, "அப்படியெல்லாம் பேச வேண்டாம்" என்று தடுத்த அனிதா ராதாகிருஷ்ணன், இறுதியாக பேசும்போது, "திருச்செந்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் யார் போட்டியிட்டாலும், வெற்றி பெற வைக்க வேண்டியது அனைவரின் பொறுப்பு" என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, தென் மாவட்டங்களில் தி.மு.க.வின் பலத்தை அதிகரிக்கும் வகையில், திருச்செந்தூர் தொகுதியில் கனிமொழியை போட்டியிடச் செய்ய தி.மு.க. தலைமை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, கனிமொழி பெயரில் தி.மு.க. நிர்வாகிகள் சிலர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்து, நிருபர்கள் கனிமொழி எம்.பி.யிடம், "சட்டசபை தேர்தலில் போட்டியிட போகிறீர்களா?" என்று கேள்வி எழுப்பியதற்கு, மறுப்பு எதுவும் தெரிவிக்காத கனிமொழி எம்.பி., "பதில் சொல்ல விரும்பவில்லை" என்று மட்டும் கூறிச் சென்றார்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, வரும் சட்டசபை தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் கனிமொழி போட்டியிடுவார் என தெரிகிறது. அவர் வெற்றி பெற்று தி.மு.க .ஆட்சி அமைக்கும் பட்சத்தில், அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.