சென்னை,
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளில், திமுக 173, காங்கிரஸ் 25, மதிமுக 6, விடுதலை சிறுத்தைகள் கட்சி 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 6, இந்திய கம்யூனிஸ்டு 6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3, மனிதநேய மக்கள் கட்சி 2, தமிழக வாழ்வுரிமை கட்சி 1, அகில இந்திய பார்வர்டு பிளாக் 1, ஆதி தமிழர் பேரவை 1 என 234 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை இடம்பெற்றுள்ள கட்சிகள் தொடர்வதுடன் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும்,தே.மு.தி.க.வும் புதிதாக இணைந்துள்ளன.
எனவே, கடந்த முறை போலவே இந்த முறையும் கூட்டணி கட்சிகளுக்கு அதே தொகுதிகளை ஒதுக்கவும், மக்கள் நீதி மய்யத்துக்கு 3 தொகுதிகளை கொடுத்துவிட்டு, மீதமுள்ள 170 தொகுதிகளில் தி.மு.க. களம் இறங்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், அதாவது கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் இந்த முறை இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டு வருகின்றன. தேசிய கட்சியான காங்கிரஸ் 41 தொகுதிகள் உள்பட ஆட்சியிலும் பங்கு கோரி வருகிறது. இதுபோன்ற நெருக்கடியான நிலையில்தான் திமுக கூட்டணியில் வரும் 22-ந் தேதி தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கப்பட இருக்கிறது.
இந்நிலையில் தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
1.R.சக்தி நடராஜன் ( துணைப் பொதுச்செயலாளர்)
2.AKP சின்ராஜ் Ex MP (துணைப் பொதுச்செயலாளர்)
3.S.சூரியமூர்த்தி (மாநில இளைரணி செயலாளர்)
4.K.நித்தியானந்தம் (துணைப் பொதுச்செயலாளர்)
5.VS மாதேஸ்வரன் MP (நாடாளுமன்ற உறுப்பினர்)
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் கொ.ம.தே.க போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.