அரசியல் களம்

திமுக கூட்டணியில் 12 தொகுதிகள் கேட்டு அடம் பிடிக்கும் ம.தி.மு.க.: பட்டியலையும் வழங்கி புது நெருக்கடி!

ம.தி.மு.க. கூடுதல் தொகுதிகள் கேட்டு மல்லுக்கு நிற்பது தி.மு.க.வுக்கு புது தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.க.வுக்கு சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர் (தனி), மதுராந்தகம் (தனி), அரியலூர் ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இந்த 6 தொகுதிகளிலும் தி.மு.க.வின் சின்னமான உதயசூரியனில் ம.தி.மு.க. வேட்பாளர்கள் களம் இறங்கினர். அதில், சின்னப்பா (அரியலூர்), பூமிநாதன் (மதுரை தெற்கு), சதன் திருமலைக்குமார் (வாசுதேவநல்லூர்), ரகுராமன் (சாத்தூர்) ஆகிய 4 பேர் வெற்றி பெற்றனர்.

காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள்?

இந்த நிலையில், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க., இந்த முறை 12 தொகுதிகள் வேண்டும் என கேட்டு அடம்பிடிப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கொடி பிடித்த காங்கிரஸ் கட்சியையே இப்போதுதான் தி.மு.க. தனது வழிக்கு கொண்டு வந்திருக்கிறது. இன்னும் தொகுதிகள் எத்தனை என்பதில்கூட முடிவு எட்டப்படவில்லை. 35 முதல் 41 தொகுதிகள் வரை காங்கிரஸ் கேட்பதாகவும், 28 முதல் 30 தொகுதிகள் வரை கொடுக்கலாம் என்ற முடிவில் தி.மு.க. இருப்பதாகவும் கூறப்படுகிறது.

திமுகவுக்கு புது தலைவலி

காங்கிரஸ் கட்சியுடனேயே இன்னும் இழுபறி நிலை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இப்போது ம.தி.மு.க.வும் கூடுதல் தொகுதிகள் கேட்டு மல்லுக்கு நிற்பது தி.மு.க.வுக்கு புது தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

அதுவும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் மகனும், எம்.பி.யுமான துரை வைகோ, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை என்பதை ஆராய்ந்து 12 தொகுதிகளை தேர்வு செய்துள்ளாராம்.

12 தொகுதிகள் என்னென்ன?

தேர்தலில் குறைந்தது 12 தொகுதிகளிலாவது போட்டியிட்டால்தான் ம.தி.மு.க.வின் சின்னமான 'பம்பரம்' கிடைக்கும் என்பதால் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

ம.தி.மு.க. கேட்கும் 12 தொகுதிகள் பட்டியலில், வாசுதேவநல்லூர், மதுரை தெற்கு, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி கிழக்கு, மணப்பாறை, கும்பகோணம், பாபநாசம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, சாத்தூர், அரியலூர் ஆகியவை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசனுக்கு எம்.பி. பதவி

ஏற்கனவே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் வைகோவின் மாநிலங்களவை எம்.பி. பதவி முடிவுக்கு வந்தபோது, மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று ம.தி.மு.க.வினர் நம்பிக் கொண்டிருந்தனர்.

ஆனால், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய தி.மு.க. தலைமை, வைகோவுக்கு மறுத்து கமல்ஹாசனுக்கு அந்த மாநிலங்களவை எம்.பி. பதவியை ஒதுக்கிவிட்டது.

மாற்று கோரிக்கை

இதனால், அதிருப்தியில் இருந்த ம.தி.மு.க. தலைமை இந்த முறை எப்படியாவது 12 தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறதாம். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை தக்கவைக்க வேண்டும் என்றால், குறைந்தது 12 இடங்களில் போட்டியிட வேண்டியது அவசியம்.

அந்த வகையில், 12 தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. தலைமை முன்வரவில்லை என்றால், மாற்று கோரிக்கை ஒன்றையும் ம.தி.மு.க. முன்வைக்கிறதாம். அதாவது, கடந்த முறை ஒதுக்கியது போல 6 தொகுதிகளும், ஏப்ரல் மாதத்தில் காலியாகும் மாநிலங்களவை எம்.பி. பதவி ஒன்றும் தர வேண்டும் என்று தி.மு.க.வை வலியுறுத்துகிறதாம்.

சபரீசனுக்கு எம்.பி. பதவி?

ஆனால், தி.மு.க. தலைமையோ, ஏப்ரல் மாதத்தில் காலியாகும் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு வழங்க முடிவு செய்திருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

இதுபோன்ற அரசியல் சூழ்நிலையில், இரண்டு விதமான கோரிக்கைகளுடன் ம.தி.மு.க. மல்லுக்கட்டுவது தி.மு.க. தலைமைக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.