சிதம்பரம்,
சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
மதுக்கடைகளை மூட வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கையாக இருந்தாலும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், மாற்றுப் பணி உள்ளிட்டவற்றை செய்து தர வேண்டும். கவுரவ விரிவுரையாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள், என்.எம்.ஆர். பணியாளர்கள் ஆகியோரின் கோரிக்கைகளுக்கும் தீர்வு காண வேண்டும்.
திமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் ஏகோபித்த ஆதரவை நல்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணி பல்வேறாக பிரிந்து இருக்கிறது. அவற்றை இப்போது ஒன்று சேர்ப்பதற்கே அவர்கள் போராடுகின்ற நிலை உள்ளது.
இன்னும் அதிமுக தலைமையிலான கூட்டணி ஒரு கூட்டணியாகவே வடிவம் பெறவில்லை என்பதுதான் உண்மை. அதனால் திமுக தலைமையிலான கூட்டணியை எதிர்ப்பதற்கு தகுதியான ஒரு கூட்டணி இன்னும் அமையவில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை.
காங்கிரசின் நிலைப்பாடு குறித்து நான் கருத்து சொல்ல எதுவும் இல்லை. தற்போது திமுக தலைமையில் என்னென்ன கட்சிகள் மேலும் இணைய வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்கக்கூடிய முழுமையான அதிகாரம் முதல்-அமைச்சருக்குதான் உள்ளது. அவருக்கு நாங்கள் எந்த அழுத்தத்தையும் கொடுக்க விரும்பவில்லை. கொடுக்கவும் மாட்டோம், இவ்வாறு அவர் கூறினார்.