சென்னை,
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் நமது திராவிட மாடல் அரசு செய்திருக்கும் சாதனைகளையும், நிறைவேற்றி இருக்கும் திட்டங்களையும் இந்திய அளவில் எல்லோரிடமும் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு மேடையை அமைத்து தந்துள்ள ஆங்கில இதழுக்கு நன்றி.
தமிழ்நாட்டுக்கான என்னுடைய கனவு என்பது தனிப்பட்ட ஸ்டாலினின் கனவு மட்டுமல்ல; ஓட்டுமொத்த தமிழ்நாட்டின் எதிர்பார்ப்புகளை உள்ளடைக்கியதுதான் எனது கனவு. நூற்றாண்டுக்கு முன்பு திராவிட இயக்கம் தொடங்கப்பட்டதில் இருந்து தமிழர்களுக்காக தொடங்கிய கனவு, அதை நோக்கிய எங்கள் பயணத்தில் கடந்த 5 ஆண்டுகாலம் என்பது பெரும் பாய்ச்சலை கண்டுள்ளது.
அனைத்து துறைகளையும் வளர்த்தெடுக்கும் ஆல்-ரவுண்டர்தான் திராவிட மாடல். தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம். நாங்கள் இப்படி அனைத்து துறைகளிலும் ஆல்-ரவுண்டர் ஆக அடித்து ஆடுவதால்தான், 'இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் நம்பர் ஒன் மாநிலம் தமிழ்நாடு' என்று நாங்கள் சொல்லவில்லை, மத்திய அரசே பாராட்டியுள்ளது.
நம்பர் ஒன் மாநிலம் மட்டுமில்லை, இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். பொருளாதார வளர்ச்சியில் மட்டுமில்ல, மனித வளம், தொழில் வளர்ச்சியிலும் இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலம் தமிழ்நாடு என்பதுதான் தமிழ்நாட்டின் தனித்தன்மை.
அனைத்து பகுதிகளில் பரவலான, சமச்சீரான எல்லோருக்குமான வளர்ச்சியை எங்கள் திராவிட மாடல் ஆட்சியில் சாதித்து காட்டியுள்ளோம். தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்களின் பகுதியில், வீடுகளில் எந்த அளவு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை பார்க்கிறார்கள். திமுக ஆட்சி என்றால் வளர்ச்சி; வளர்ச்சி என்றால் அது திமுக ஆட்சி என தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். அதற்காகத்தான் இங்கு திராவிட மாடல் ஆட்சிக்கான ஆதரவு அலை வீசுகிறது.
பாஜக ஆளும் மாநிலங்களில் டபுள் எஞ்சின் ஆட்சி என்பது டப்பா எஞ்சின் ஆட்சி.. அங்கே வளர்ச்சியே இல்லை. தமிழகத்தை போன்ற வளர்ச்சியை அங்கே காட்ட முடியுமா?. மதுரைக்கு வந்த பிரதமர் மோடி சொல்ல சாதனைகள் இல்லாததால் பொய்யை அவிழ்த்துவிட்டிருக்கிறார். மதுரவாயல் துறைமுகம் திட்டத்தை தாமதப்படுத்தியது அதிமுகதான்.. திமுக ஆட்சிக்கு வந்த பின்பே திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சி என்கிறார்; பிரதமர் மோடி என்.டி.ஏ. ஆட்சி என்கிறார். யார் யாருக்கு தலைமை என்று தெரியாமலேயே ஒரு கூட்டணி உள்ளது.
திராவிட மாடல் அரசு செய்துள்ள சாதனைகள் எல்லாம், மத்திய அரசின் உதவி இல்லாமலே சாதித்துக் காட்டியிருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால், அவர்கள் நெருக்கடிகளை மீறி சாதித்துக் காட்டியிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.