அரசியல் களம்

மாநிலங்களவை தேர்தல்: எல்.கே.சுதீஷ்,கிறிஸ்டோபர் திலக் வேட்புமனு தாக்கல்

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு இடமும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். திமுக சார்பில் 4 எம்.பி.க்களையும், அதிமுக சார்பில் 2 எம்.பி.க்களையும் நிறுத்த முடியும். இதில் திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு இடமும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி கிறிஸ்டோபர் திலக் என்பவரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்தநிலையில், மாநிலங்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் எல்.கே.சுதீஷ் வேட்புமனு தாக்கல் செய்தார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

முன்னதாக மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட கிறிஸ்டோபர் திலக் வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.