சென்னை,
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 17-வது சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் தொடக்கத்தில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், பிரதான எதிர்கட்சியான அதிமுக கூட்டணியை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் பாஜக, பாமக (டாக்டர் அன்புமணி அணி), தமாகா, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் பாஜக தலைவர்கள் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
அதிரடி காட்டும் எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில், வரும் 24-ந் தேதி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 78-வது பிறந்த நாள் வருகிறது. அதற்கு முன்னதாக, கூட்டணியை இறுதி செய்து, தொகுதி பங்கீட்டையும் முடித்து, எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்? என்பதை அடையாளம் கண்டுவிடவும் அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா பிறந்த நாள் அன்று பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் பட்டியலையும், அதிமுக வேட்பாளர்களின் முதல் பட்டியலையும் வெளியிட்டு அதிரடி காட்ட கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
15 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள்
ஏற்கனவே, அதிமுகவின் தேர்தல் அறிக்கை 2 கட்டங்களாக வெளியிடப்பட்டுள்ளன. அதில், "மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும். ஆண்களுக்கும் அரசு பஸ்களில் இலவச பயணம். ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் இலவசம்" என்பது உள்பட 10 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.
இந்த நிலையில், ஜெயலலிதா பிறந்த நாள் அன்று 15 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் முதல் பட்டியலும் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கும் என தெரிகிறது.
4 முனைப்போட்டி
தமிழக தேர்தல் களத்தை பொறுத்தவரை 4 முனைப்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தனித்து களம்காணும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வரும் 21-ந் தேதி திருச்சியில் நடைபெறும் மக்கள் மாநாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சிக்கு அடுத்தப்படியாக தேர்தல் களத்தில் வேகம் காட்டுவது அதிமுக தான். ஆளுங்கட்சியான திமுக இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் இருப்பதுடன் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறது.
அதிமுக தீவிரம்
ஆனால், அதிமுகவோ தேர்தல் அறிக்கையில் முக்கியமாக இடம்பெறும் 10 அறிவிப்புகளை வெளியிட்டதுடன், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதிலும் தீவிரம் காட்டி வருகிறது.
வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் அதிமுக 170, பாஜக 25, பாமக 23, தமாகா 6, ஏனைய சிறிய கட்சிகள் 1 முதல் 2 தொகுதிகளில் போட்டியிடும் என தெரிகிறது.
2021 சட்டசபை தேர்தல்
கடந்த (2021) சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம் வருமாறு:-
அதிமுக (இரட்டை இலை) - 179
பா.ம.க. (மாம்பழம்) - 23
பா.ஜ.க. (தாமரை) - 20
த.மா.கா. (இரட்டை இலை) - 6
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் (இரட்டை இலை) - 1
மூவேந்தர் முன்னேற்ற கழகம் (இரட்டை இலை) - 1
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் (இரட்டை இலை) - 1
பசும்பொன் தேசிய கழகம் (இரட்டை இலை) - 1
பெருந்தலைவர் மக்கள் கட்சி (இரட்டை இலை) - 1
புரட்சி பாரதம் (இரட்டை இலை) - 1