சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக, கூட்டணியில் உள்ள 21 கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையை நடத்தி வருகிறது.
கடந்த மாதம் (பிப்ரவரி) 22-ந் தேதி முதல் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும், இதுவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளுடன் மட்டுமே தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. இரு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் சிக்கல்
காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வருவதால், ஏனைய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை தொடர முடியாத நிலைக்கு திமுக தலைமை தள்ளப்பட்டது. ஏற்கனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளான மார்ச் 1-ந் தேதிக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்க திமுக திட்டமிட்டு இருந்தது. ஆனால், அது குறித்த நாளுக்குள் நடைபெறவில்லை.
இதுவரை, டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையிலான திமுக பேச்சு வார்த்தை குழுவினர், காங்கிரஸ் கட்சியுடன் 2 முறை தொகுதி பங்கீடு குறித்து பேசியுள்ளனர். முதலில் காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளையும், 2 ராஜ்ய சபா சீட்டையும் கேட்டது. ஆனால், திமுகவோ 25 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் மட்டுமே தருவதாக கூறியது.
கிரிஷ் சோடங்கர் அதிருப்தி
இதுகுறித்து, காங்கிரஸ் தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், திமுக கூட்டணியை தொடர சோனியாகாந்தி விரும்புவதாகவும், ராகுல்காந்தி தான் கேட்ட தொகுதிகள் கிடைக்காவிட்டால் வெளியேறலாம் என்று கூறிவருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நேரத்தில், திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்த சென்ற தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், பேச்சுவார்த்தை நிகழ்வில் அதிருப்தி அடைந்ததால், 'இனி இந்தப் பணியை நான் மேற்கொள்ளமாட்டேன்' என்று கட்சி தலைமைக்கு இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
ப.சிதம்பரம் களம் இறங்கியது ஏன்?
அதனால்தான், சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரின் ஆலோசனையின் பேரில், மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் களம் இறக்கப்பட்டுள்ளார். அவரும் உடனடியாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்திற்கு இன்று நேரில் சென்று சந்தித்தார்.
சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது, தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டது. அப்போது, சோனியாகாந்தி, ராகுல்காந்தி கூறியதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ப.சிதம்பரம் கூறினார்.
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
இந்த பேச்சு வார்த்தையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. முதலில் 41 தொகுதிகள், 2 ராஜ்ய சபா சீட் என்று கேட்டுவந்த காங்கிரஸ், பிறகு 39 தொகுதிகள், 2 ராஜ்ய சபா சீட் என்றும், அடுத்து 36 தொகுதிகள், 2 ராஜ்ய சபா சீட் என்றும் படிப்படியாக இறங்கி வந்தது.
அதே நேரத்தில், திமுகவும் 25 தொகுதிகள், 1 ராஜ்ய சபா சீட்டில் இருந்து, 28 தொகுதிகள், 1 ராஜ்ய சபா சீட் என்ற அளவுக்கு சற்று ஏறி வந்தது. இந்த தகவலை, மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், சோனியாகாந்தி, ராகுல்காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அனேகமாக, காங்கிரஸ் கட்சிக்கு 30 தொகுதிகள், 1 ராஜ்ய சபா சீட் என்ற அளவில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை சுமுகமாக முடிவடையும் என்று தெரிகிறது.