அரசியல் களம்

ஒற்றை இலக்கத்தில்தான் சீட்; திமுக-அதிமுகவின் முடிவால் யாருடன் கூட்டணி சேரப்போகிறது தேமுதிக...?

விஜய்யின் அரசியல் பிரவேசத்தால் திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்கு ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்.

சென்னை,

தேமுதிக சந்தித்த முதல் தேர்தல்

தமிழகத்தில் அ.தி.மு.க. உருவாகியதில் இருந்து தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன. ஒரு கட்சி ஆட்சியை பிடித்தால் இன்னொரு கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடிக்கும். இந்த இருகட்சிகளுக்கு மாற்றாக பார்க்கப்பட்ட கட்சி தான் விஜயகாந்தின் தே.மு.தி.க. ஆகும்.

2006-ம் ஆண்டு தே.மு.தி.க. சந்தித்த முதல் தேர்தலிலேயே 8.38 சதவீத வாக்குகளைப் பெற்று சாதனை படைத்தது. ஆனால் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்தார்.

2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது. அந்த கூட்ட ணியில் போட்டியிட்ட தே.மு.தி.க. 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 இடங்களில் வென்று மொத்தம் 7.88 சதவீத வாக்குகளை பெற்றது. அந்த முறை எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து விஜயகாந்துக்கு கிடைத்தது.

2016-ம் ஆண்டு தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி சார்பாக முதல்-அமைச் சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். அந்த கூட்டணியில் 104 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. மொத்தம் 2.41 சதவீத வாக்குகளை பெற்றது.

2021-ம் ஆண்டு தேர்தலில் அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 60 தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிட்ட நிலையில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறமுடியவில்லை. மொத்த வாக்கு சதவீதமும் 0.43 என குறைந்து போனது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க.-தி.மு.க. என இரு கட்சிகளுடன் தே.மு.தி.க. ஒரு சேர பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், தே.மு.தி.க.வின் கோரிக் கையை இரு கட்சிகளும் ஏற்கவில்லை. அதனால் இறுதியாக டி.டி.வி.தின கரனின் அ.ம.மு.க.வுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.வை சேர்க்க தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் விரும்புகின்றன.

ஏனென்றால் விஜய்யின் அரசியல் பிரவேசத்தால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஒவ்வொரு ஓட்டும் முக்கியம். இதனை கருத்தில் கொண்டு தே.மு.தி.க.வும் இருதரப்பினருடனும் திரைக்கு பின்னால் பேச்சுவார்த்தை நடத்தியது. அ.தி.மு.க. தரப்பில் ஒரு எம்.பி. சீட்டு மற்றும் ஒற்றை இலக்கத்திற்குள் சட்டசபை தொகுதி தருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் தி.மு.க.வும் கூறுவதாக தெரிகிறது.

அதற்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஒரு சேர சொல்லும் காரணம் என்ன வெனில், 'கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. ஒரு சதவீத வாக்கு கூட பெறவில்லை. வெறும் 0.43 சதவீதம் தான் பெற்று இருக்கிறது. மேலும் 60 தொகுதிகளில் போட்டியிட்டு அந்த கட்சி பெற்ற ஒட்டு வெறும் 2 லட்சத்து 100 தான். அப்படி இருக்கையில் கூடுதல் தொகுதிகள் கொடுத்தால் பலன் இருக்காது' என்பது தான்.

எந்த கூட்டணியில் தேமுதிக?

தே.தி.மு.க.வை பேச்சுவார்த்தைக்காக கடந்த 2 நாட்களாக அ.தி.மு.க. அழைத்த நிலையில், அவர்கள், அஷ்டமி, நவமி என ஏதாவது ஒரு கார ணத்தை சொல்லி பேச்சுவார்த்தைக்கு வராமல் தவிர்த்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்காரணமாக அ.தி.மு.க.. இனி அவர்களாக வந்தால் வரட்டும், போனால் போகட்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டதாக தெரிகிறது.

தே.மு.தி.க.வை பொறுத்தவரை, 'இப்போது மக்கள் எங்களை விரும்புகி றார்கள். எனவே எங்களுக்கு யார் அதிக சீட்டு தருகிறார்களோ, அங்கு செல்வோம்' என வெளிப்படையாக கூறுகிறார்கள்.

எது எப்படியோ, தே.மு.தி.க. எந்த கூட்டணியில் சேரப்போகிறது? என்ற எதிர்பார்ப்பு தே.மு.தி.க. தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்லாம் பிற கட்சியினர் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.