அரசியல் களம்

தமிழக சட்டமன்ற தேர்தல்: முதல் நாளே வேட்பு மனு தாக்கல் செய்யும் தலைவர்கள்

தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டன.

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 5.73 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த 15-ஆம் தேதி வெளியானது. இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அன்றைய தினமே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் சார்பில் பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் நடைபெறாமல் தடுக்கவும், விதிமீறல்கள் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கவும் தலா 2,106 பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் தீவிர சோதனை நடத்தி வருகின்றன.

தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டன. நாம் தமிழர் கட்சியிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர்.தவெகவும் அறிவித்துவிட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று (30-ஆம் தேதி) தொடங்கியது. இதையொட்டி, அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகள் சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்கப்படுகின்றன. அரசியல் கட்சியினர் அங்கு கூட்டமாக வருவதை தடுக்க பல அடுக்குத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து தொகுதிகளிலும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். ஏப்ரல் 6-ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான முதல் நளான இன்று முதல்வர் முக ஸ்டாலின், தவெக தலைவர் விஜய்,நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தாக்கல் செய்ய உள்ளனர். மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும் விஜய் பெரம்பூர் தொகுதியிலும், சீமான் காரைக்குடி தொகுதியிலும் தாக்கல் செய்ய உள்ளனர்.