குமரி,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று குமரி மாவட்டம் வந்தார். முதலில் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவு, கல்லடிவிளையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை, நாகர்கோவில் வேப்பமூடு சர்.சி.பி.ராமசாமி அய்யர் நினைவு பூங்காவில் தியாகி பொன்னப்ப நாடார் சிலை ஆகியவற்றை திறந்து வைத்தார்.
இன்று நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.1,785 கோடியில் குமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தும், பல்வேறு துறைகளின் சார்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பய னாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன்பின்னர் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இந்திய துணைக் கண்டத்தின் தொடக்கமான ‘வள்ளுவமுனை’ இருக்கும் குமரி முனைக்கு வந்திருக்கிறேன். பால்வளத்துறையை சிறப்பாக கவனித்துக்கொள்ளக் கூடிய வெள்ளை உள்ளத்திற்கும், கொள்கைக்கும் சொந்தக்காரரான அமைச்சர் மனோ தங்கராஜுக்கு என் வாழ்த்துகள், பாராட்டுகள்.
14 வயதில் இருந்து அரசியலில் இருக்கும் நான் 50 ஆண்டு தொடர் உழைப்பால் இந்த இடத்தில் இருக்கிறேன்; நான் போகாத ஊரே தமிழ்நாட்டில் இல்லை என்பதால் மக்களுக்காக திட்டங்களை தீட்டுகிறேன். இந்த அரசில் ஒவ்வொரு நாளும் ஏதோவொரு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது; உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக என் சக்திக்குமீறி உழைத்து வருகிறேன்.
மகளிர் உரிமைத்தொகையை 3 மாதம் நிறுத்தி வைக்க சூழ்ச்சி நடந்தது; நாம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேர்தல் சமயத்தில் தமிழ்நாட்டை சிலர் தொடர்ந்து வட்டமிட்டு வருகின்றனர். தேர்தல் நேரம் என்பதால் தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வரத் தொடங்கியுள்ளார். எவ்வளவு முறை அவர் இங்கு வருகிறாரோ, அந்த அளவிற்கு பெரிய வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணி தோல்வியடையும். காரணம், தமிழ்நாட்டிற்கு அவர் ஒன்றுமே செய்யவில்லை.
தமிழ்நாட்டிற்கு மத்திய பா.ஜ.க அரசு, இதுவரை ஒன்றும் செய்யவில்லை. நேற்றுகூட, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் குஜராத் மாநில மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் இல்லை. அதனால்தான் இந்த தேர்தல் என்பது தமிழ்நாடு Vs என்.டி.ஏ. பாஜக இருந்தால் வளர்ச்சி இருக்காது, வளர்ச்சி இருந்தால் அவர்கள் (பாஜக) இருக்க மாட்டார்கள்.
தமிழ்நாடு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து ஆளப்பட வேண்டும். டெல்லியில் இருந்து ஆளப்படக்கூடாது. இதை தீர்மானிக்கும் தேர்தல்தான் இது. பாஜக என்கிற டப்பா எஞ்சினை நம்பி அதிமுக இருக்கிறது. அதிமுக என்கிற மூழ்கும் கப்பலை நம்பி பாஜக இருக்கிறது. பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான், ராஜ்ஜியம் கிடைக்காது. திராவிட மாடல் ஆட்சியில் மதநல்லிணக்கமும், ஒற்றுமையும் பேணப்படுகிறது. இங்கு சிறுபான்மையினர் பாதுகாப்பாகவும், பெரும்பான்மையினர் சகோதர உணர்வோடும் வாழ்கிற சூழலில், அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.