அரசியல் களம்

தமிழ்நாட்டில் மதக் கலவரம், சாதி கலவரம், இல்லை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நம் எதிரிகளையும், உதிரிகளையும் தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருச்சி,

திருச்சி மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

திருச்சி உழவர் சந்தையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நான் திருச்சிக்கு மீண்டும் மீண்டும் வருவதுபோல் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் மீண்டும் வரவேண்டும். 2021 சட்டமன்றத் தேர்தலில் திருச்சியில் உள்ள 9 தொகுதிகளிலும் வெற்றி கொடுத்தீர்கள்; இந்தமுறையும் திருச்சியில் 100% வெற்றியை மக்கள் தர வேண்டும். தலைநகர் சென்னைக்கே சவால்விடும் வகையில் திருச்சி தரம் உயர்ந்து வருகிறது.

இல்லத்தரசிகளுக்கு கூப்பன் திட்டம் என சூப்பர் டூப்பர் திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக கொடுத்துள்ளோம். இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்கும் திட்டம் பற்றி எங்கு பார்த்தாலும் பேச்சாக உள்ளது; கூப்பனை பயன்படுத்தி எந்த பொருளை, எங்கே வாங்கலாம் என்பது உங்களின் சாய்ஸ்தான். நான் கலைஞரின் மகன்.. சொன்ன வாக்குறுதிகளை மறக்கவும் மாட்டேன், மறைக்கவும் மாட்டேன்.

திமுகவின் இல்லத்தரசி திட்டத்தை பார்த்து வயிறு எரிந்து, அது ஊழலுக்கான திட்டம் என சம்மந்திக்கு காண்ட்ராக்ட் கொடுப்பதற்காகவே ஆட்சியை நடத்திய எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். வாய் இருக்குனு எது வேண்டுமானாலும் பேசலானு பேசுகிறார் பழனிசாமி. எப்போதும் சுற்றுப்பயண எண்ணத்திலேயே இருக்கும் பிரதமருக்கு தமிழ்நாட்டின் சாதனைகள் தெரிந்திருக்காது. பிரதமர் ஒருவாரம் இங்கு தங்கியிருந்து தமிழ்நாடு எவ்வளவு முன்னேறியிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி முழு சங்கியாகவே மாறி விட்டார். மக்கள் வாக்களிக்காமலேயே எம்.எல்.ஏ.க்களை ஏலத்தில் எடுத்து ஒரு முறை முதல்-அமைச்சர் ஆனவர்தான் எடப்பாடி பழனிசாமி. மீண்டும் அவரிடம் ஆட்சி சென்றால், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் டெல்லியிடம் விற்று விடுவார். தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க நேரடியாக வந்தால், நோட்டாவிற்கு கிடைக்கும் வாக்குகள் கூட கிடைக்காது என உணர்ந்து, கொத்தடிமை அ.தி.மு.க முகமூடியின் மூலம் நுழையப் பார்க்கிறது பா.ஜ.க.

பாஜக கூட்டத்தில் பெரியாரையும் அண்ணாவையும் கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டார்கள். ஆனால் அங்கே இருந்த 3 முன்னாள் அமைச்சர்கள் சொரணையே இல்லாமல் இருந்தார்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரோ, அம்மையார் ஜெயலலிதாவோ இப்படி விட்டிருப்பார்களா? வேடிக்கை பார்த்து கொண்டியிந்திருப்பார்களா?’’

கடந்த 11 ஆண்டுகாலமாக ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் பா.ஜ.க, தமிழ்நாட்டிற்கென்று எந்த சிறப்பு திட்டத்தையும் வழங்கவில்லை. அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையை கூட இன்றுவரை கட்டிமுடிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் சாதி கலவரம் இல்லை. பாஜக ஆளும் மாநிலங்களை போல மத கலவரம் இல்லை. உத்தரப்பிரதேசம் மாதிரி கும்பல் வன்முறை இல்லை. மணிப்பூரை போல தொடர் வன்முறை இல்லை. இதையெல்லாம் இங்கே உருவாக்க வேண்டுமென பாஜக செய்த சூழ்ச்சிகளையும் நாம் முறியடித்துள்ளோம். அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டின் பெயரை 'தட்சிண பிரதேஷ்' என மாற்றக் கூட தயங்க மாட்டார்கள்; நம் எதிரிகளையும், உதிரிகளையும் தேர்தலில் வீழ்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.