கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-இங்கு ஒரு நடிகர் இருக்கிறார். கட்சி தொடங்கியதும் சந்திக்கும் முதல் தேர்தலிலேயே முதல்-அமைச்சராக வேண்டும் என ஆசைப்படுகிறார். பல ஆயிரம் கோடிகளை விட்டுவிட்டு மக்கள் பணி செய்ய வந்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் பதவிக்காக மட்டுமே வந்திருக்கிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நினைத்திருந்தால் எத்தனையோ கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி அமைத்திருக்க முடியும். ஆனால் நாங்கள் ஏன் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருக்கிறோம்? அதுதான் கொள்கை பிடிப்பு.அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் அதிக சீட்டு கிடைப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் தவிர்த்து, கொள்கை பிடிப்புக்காக நின்ற கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி.
கடந்த 3 ஆண்டுகளாக அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அப்படி அ.தி.மு.க.வுடன் நான் கூட்டணி வைத்திருந்தால், எடப்பாடி பழனிசாமி பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்திருக்க மாட்டார். இன்று அரசியலில் தேர்தல் களமே மாறி இருக்கும்.தப்பித்தவறி ஒரு வேளை எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சரானால், அவரின் பதவி இரண்டு மாதங்களுக்குள் பறிக்கப்படும். அதற்கு பதிலாக எச். ராஜாவையோ அல்லது அண்ணாமலையையோ அல்லது பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரனையோ முதல்வராக பா.ஜ.க. தேர்வு செய்யும். அந்த நிலைக்கு பா.ஜ.க. செல்லும். இவ்வாறு அவர் பேசினார்.