சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் த.வெ.க. என இந்த தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் சூழல் உள்ளது.
த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தரப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தார். இருப்பினும் த.வெ.க.வுடன் இதுவரை எந்த கட்சியும் கூட்டணியில் இணைய முன்வரவில்லை. இந்த நிலையில், அடுத்தகட்ட தேர்தல் நகர்வுகள் குறித்து த.வெ.க. தீவிரமாக திட்டம் தீட்டி வருகிறது.
இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைய வேண்டும் என பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-
“1967-ல் நேர் எதிர்க்கட்சியாக இருந்த ராஜாஜியும், தி.மு.க.வும் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பதற்காக வியூகம் வகுத்து கூட்டணி அமைத்தார்கள். கொள்கை கூட்டணி வேறு, தேர்தல் கூட்டணி என்பது வேறு. தேர்தல் அரசியலில் வியூகம் முக்கியம்.
த.வெ.க. தலைவர் விஜய் வாக்கு சதவீதத்தை மட்டுமே நிரூபிக்க தேர்தலுக்கு வந்தால் சரி. ஆனால் தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கம் இருக்கும்போது, அதே நோக்கத்துடன் இருக்கும் கூட்டணியில் இணைவதுதான் சரியானது.
தி.மு.க.வை வீழ்த்த த.வெ.க.வுக்கு 15 சதவீத வாக்குகள் கிடைத்தால் போதுமா? சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்காமல் விஜய் 15 சதவீதம் எடுத்தாலும் அது பூஜ்ஜியம்தான். தி.மு.க.வை வீழ்த்த விஜய்யின் வியூகம் என்ன? தனியாக நின்றால் விஜய்யால் தி.மு.க.வை வீழ்த்த முடியுமா? கூட்டாகத்தான் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும். தனித்து ஓட்டு வாங்குவதால் என்ன பயன்?
எதிர்க்கட்சியின் வாக்குகள் உதிரியாக போய்விட்டால் தி.மு.க.வை தோற்கடிக்க முடியுமா? எதிர்க்கட்சிகள் உதிரியாக இருக்க கூடாது. தி.மு.க.வை வீழ்த்த கூட்டணி உறுதியாக இருக்க வேண்டும். தி.மு.க.வை வீழ்த்த பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியில் விஜய் இணைய வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.