தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பொதுத்தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி, த.வெ.க. தலைமையிலான கூட்டணி என 4 முனைப்போட்டி நிலவி வருகிறது. ஒவ்வொரு கூட்டணியும் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழக வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய்யும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். இன்று நெல்லையில் விஜய் பிரசாரம் செய்தார். இந்தநிலையில் குமரி மாவட்டத்தின் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக வருகிற 12-ந் தேதி குமரி மாவட்டம் வருகிறார்.
இதற்காக கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை த.வெ.க. கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். அங்கு அமைக்கப்பட உள்ள பிரமாண்டமான பொதுக்கூட்ட மேடையில் 6 தொகுதிகளின் த.வெ.க. வேட்பாளர்களையும் ஆதரித்து நடிகர் விஜய் பிரசாரம் செய்து விசில் சின்னத்துக்கு ஆதரவு திரட்டுகிறார்.
குமரி மாவட்டத்துக்கு நடிகர் விஜய் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதையொட்டி த.வெ.க. நிர்வாகிகள் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி கடிதம் கொடுத்தனர். இதையடுத்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், 12-ந் தேதி நடைபெற உள்ள த.வெ.க. பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளார். மேலும் அந்த பொதுக்கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் மட்டும் பங்கேற்க அனுமதி அளித்துள்ளனர்.