தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீண்டும் மக்கள், நிர்வாகிகள் சந்திப்புகளில் தீவிரம் காட்டி வருகிறார். விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய்யின் சுற்றுப்பயண விவரங்களும் விரைவில் வெளியாகும் என தவெகவினர் மத்தியில் கூறப்படுகிறது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் விஜய்யின் கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஈரோடு, சேலம், வேலூரில் விஜய்யின் கூட்டம் நடைபெற்ற நிலையில், அடுத்ததாக தஞ்சையில் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் இந்தக் கூட்டம் நடைபெறலாம் என கூறப்படுகிறது. இது மக்கள் சந்திப்பு கூட்டமா? அல்லது 5 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ளும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமாக நடைபெறுமா? என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
தஞ்சை கூட்டத்திற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்டு விரைவில் தவெக நிர்வாகிகள் மனு அளிக்க உள்ளனர். தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பு மூன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்த தவெக திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்டா மாவட்டத்தைத் தொடர்ந்து, அடுத்ததாக தென் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்த விஜய் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.