சென்னை,
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, எந்தெந்த தொகுதிகளை தி.மு.க.விடம் கேட்டு பெறலாம் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது.
காங்கிரஸ் தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், கே.வி. தங்கபாலு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
இதனையடுத்து காங்கிரஸ் வேட்பாளர்களின் உத்தேசப்பட்டியல் நேற்று ஊடகங்களில் வெளியானது. ஆனால், அதற்கு செல்வப்பெருந்தகை மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "சில தொலைக்காட்சிகளில் வெளியானதாக கூறப்படும் காங்கிரஸ் வேட்பாளர் உத்தேச பட்டியல், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பட்டியல் அல்ல. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கட்சி தலைமையின் மூலம் மட்டுமே வெளியிடப்படும்" என்று தெரிவித்து இருந்தார்.
தற்போது காங்கிரஸ் வசம் இருக்கும் காரைக்குடி, சிவகாசி, அறந்தாங்கி, ஸ்ரீபெரும்புதூர்(தனி), வேளச்சேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், ஊட்டி, நாங்குநேரி, மயிலாடுதுறை, பொன்னேரி, சோழிங்கர், ஸ்ரீவைகுண் டம், தென்காசி, திருவாடானை, விருதாச்சலம் ஆகிய 17 தொகுதிகளை கேட்டு பெறுவது என காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாகவும், இவை தவிர கூடுதலாக 11 இடங்கள் எவை என்பதும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் வசம் இருக்கும் 17 தொகுதிகளில் கடந்த முறை போட்டியிட்டவர்களில் பலருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படாது என கூறப்படுகிறது. காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியல் இறுதி செய்யப்பட் டுள்ள நிலையில் அதனை கட்சி தலைமைக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றதும், தி.மு.க.விடம் வழங்க தமிழக காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.