அரசியல் களம்

திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏன்? - பரபரப்பு தகவல்

விசிகவுக்கு மார்ச் 2-ந்தேதி அன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்துவதற்காக 3 மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் அல்வா, தமி ழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகிய 5 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

ஆட்சியில் பங்கு

இந்த குழுவின் தலைவர் கிரிஷ் சோடங்கர், ஆட்சியில் அதிகாரம் வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலை விட கூடுதல் இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று தனது நிலைப்பாட்டை தெரிவித்தார். அவருடைய இந்த கருத்தை வழிமொழியும் விதமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூர் எம்.பி. உள்ளிட்ட நிர்வாகிகள் கருத்துகளை வெளிப்படுத்தினார்கள்.

தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி சரிவராது என்ற தி.மு.க.வின் நிலைப்பாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஆட்சி அதிகாரம் கோரிக்கையை காங்கிரஸ் கைவிட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலை விட கூடுதல் இடங்களை பெற்றுவிட வேண்டும் என்பதில் கிரிஷ் சோடங்கர் விடாபிடியாக உள்ளார்.

தொகுதி பங்கீடு இழுபறி

தி.மு.க.வுடன் நேரடி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை என்றாலும் மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தபட்சம் 35 தொகுதிகளும், 2 மாநிலங் களவை எம்.பி. பதவியும் வழங்க வேண்டும் என்று கிரிஷ் சோடங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர், சமீபத்தில் கனிமொழி எம்.பி.யை சந்தித்த போதும், இந்த கோரிக் கையை வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலி னின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர், கடந்த சட்ட மன்ற தேர்தலை போன்று காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை எம்.பி.யும் கொடுக்கலாம். இதற்கு காங்கிரஸ் தரப்பில் இசைவு தெரிவித்தால் உடனடியாக தொகுதி பங்கீடு ஒப்பந்தம் மேற்கொண்டு விடலாம் என்று கூறியதாக தெரிகிறது.

ஆனால் கிரிஷ் சோடங்கர், 35 தொகுதிகள் வேண்டும் என்பதில் தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதுதான் தி.மு.க. - காங்கிரஸ் தொகுதி பங்கீடு இழுபறிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.-காங்கிரஸ் இடையே நேரடி தொகுதி பங்கீடு முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கும் என்று நேற்று தகவல்கள் வெளியானது. இந்த தகவல்களை 2 தரப்பில் இருந்தும் மறுத்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வருமாறு தி.மு.க. தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவால் அக்கட்சி துக்கம் அனுசரித்து வருகிறது. எனவே இந்திய கம்யூனிஸ்டு கட்சி குழு இன்று பேச்சுவார்த்தைக்கு வரமாட்டார்கள் என்று தெரிகிறது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மார்ச் 2-ந்தேதி அன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.