சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளில் புது வரவான தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக போட்டியிட இருக்கிறது. 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட விஜய் தயாராகி வருகிறார். தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள விசில் சின்னத்தை வலுவான பிரசார ஆயுதமாக மாற்ற விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையில் தவெக சார்பில் சட்டபை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வாங்கும் பணி நடைபெற்றது.
இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை 2 வாரங்களில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேட்பாளர் பட்டியலை விஜய் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேர்காணலை தவெக தலைவர் விஜய் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் பட்டியலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், மாவட்டச் செயலாளர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்களுக்கு முக்கிய இடங்கள் ஒதுக்கப்பட உள்ளதாகவும் தவெக வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்தவுடன், பொதுக்கூட்டம், நிர்வாகிகள் சந்திப்பு என பல்வேறு பணிகளை தவெக முழுவீச்சில் மேற்கொள்ள உள்ளது.