செய்திகள்

மதுரை ரெயில்வே கோட்டத்துடன் பொள்ளாச்சி இணைக்கப்படும் - மகேந்திரன் எம்.பி. பேச்சு

மதுரை ரெயில்வே கோட்டத்துடன் பொள்ளாச்சி இணைக்கப்படும் என்று மகேந்திரன் எம்.பி. கூறினார்.

பொள்ளாச்சி,

காந்தி ஜெயந்தியையொட்டி பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை, ரெயில் பயணிகள் நலச்சங்கம், பாலக்காடு ரெயில்வே கோட்டம் ஆகியவை இணைந்து பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு தொழில் வர்த்தக சபை தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். விழாவில் மகேந்திரன் எம்.பி. கலந்துகொண்டு காந்தி உருவபடத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ரெயில் நிலையத்தை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி வைத்து பேசினார். அபபோது அவர் கூறியதாவது:

கடந்த பாராளுமன்ற தேர்தலில் போது பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கோவை ரோடு, உடுமலை ரோடு நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது. நிதி பற்றாக்குறையால் அகலரெயில் பாதை பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து அப்போதைய ரெயில்வே மத்திய மந்திரி சதானந்தா கவுடாவிடம் பேசி, நீண்ட போராட்டத்திற்கு பிறகு கூடுதலாக ரூ.180 கோடி நிதி பெறப்பட்டு, பணிகள் விரைந்து முடிக்கப்பட்டன. கோவை ரோட்டில் சுங்க சாவடி அமைக்க கூடாது என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசும் பரிசீலனை செய்து வருகிறது. பொள்ளாச்சியை மதுரை ரெயில்வே கோட்டத்துடனும், கிணத்துக்கடவை சேலம் ரெயில்வே கோட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையும் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. அனைத்து கோரிக்கைகளையும் இன்னும் 3 மாத காலத்திற்குள் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பயணி ஒருவர், திருச்செந்தூர் ரெயில் வாரத்தில் பாதி நாட்கள் திருச்செந்தூர் செல்வதில்லை. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பாதியில் திரும்பி சென்று விடுகின்றனர். திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரசும் சரியான நேரத்திற்கு வருவதில்லை. வழக்கமாக 2 கவுண்ட்டர்கள் மட்டும் செயல்படும். இதனால் டிக்கெட் கிடைக்காமல் ஏராளமானோர் ரெயிலை தவற விடுகின்றனர். இன்று (நேற்று) எம்.பி. வருகிறார் என்றதும் கூடுதலாக ஒரு டிக்கெட் கவுண்ட்டர் திறக்கப்பட்டு உள்ளது என்றார்.

இதையடுத்து மகேந்திரன் எம்.பி. ரெயில்களை சரியான நேரத்திற்கு இயக்க வேண்டும். தற்போது செயல்படுவது போல் 3 டிக்கெட் கவுண்ட்டர்கள் செயல்பட வேண்டும் என்று ரெயில்வே அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். அதை தொடர்ந்து மாணவமாணவிகள் ரெயில் நிலையத்தில் கிடந்த குப்பைகளை அகற்றினார்கள். மேலும் சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ரெயில் நிலைய வளாகத்தில் ஒட்டப்பட்டது.இதில் ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் ராஜசேகரன், துணை தலைவர் கிருஷ்ணகுமார், செயலாளர் மோகன்ராஜ், இணை செயலாளர் ஸ்டாலின், தாளாளர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.