புதுடெல்லி,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் கடந்த மார்ச் 16-ந் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதனால், சி.பி.எஸ்.இ., சி.ஐ.சி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சில பாடங்களுக்கு இன்னும் தேர்வு நடத்தப்படவில்லை.
தள்ளி வைக்கப்பட்ட இந்த தேர்வுகள், ஜூலை 1-ந் தேதி முதல் 15-ந் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரவர் படித்த பள்ளிகளிலேயே தேர்வு எழுதலாம் என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ஸ்டூடண்ட்லைவ்ஸ்மேட்டர், லைவ்ஸ்ஓவர்எக்சாம்ஸ், கேன்சல்போர்டுஎக்சாம்ஸ் என்ற பெயர்களில் ஹேஷ்டேக் உருவாக்கி, ஆன்லைன் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, நிஷாந்த அக்ஷர், ரோகிணி பூமிஹர் என்ற பெற்றோர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும்போது, எங்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம் தருவது?
தமிழ்நாடு
ஒரு மாணவனுக்கோ அல்லது ஒரு கண்காணிப்பு அதிகாரிக்கோ அறிகுறி இன்றி கொரோனா வந்தால், அந்த அறையில் உள்ள அனைவருக்கும் கொரோனா வந்து விடும். ஒரு அறையில் கொரோனாவின் வீரியம் 4 மணி நேரம்வரை அதிகமாக இருக்கும். மேலும், மாணவர்கள் மீண்டும் தேர்வுக்கு படித்த பிறகு, கடைசி நேரத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டால், அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள்.
பஞ்சாப், தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் 10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்துள்ளன. அவற்றை பின்பற்றி சி.பி.எஸ்.இ., சி.ஐ.சி.எஸ்.இ. தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே நடந்த தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் சராசரி அடிப்படையிலும், உள்மதிப்பீட்டு மதிப்பெண் அடிப்படையிலும் இந்த பாடங்களுக்கு மதிப்பெண் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சுப்ரீம் கோர்ட்டில் மனு
மேலும், 4 பெற்றோர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில், வெளிநாடுகளில் 250 பள்ளிகளுக்கான 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை சி.பி.எஸ்.இ. ரத்து செய்துள்ளது. அதே பாணியில், இங்கும் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு மீதம் உள்ள தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.