செய்திகள்

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக குடியாத்தம் நகராட்சி பகுதியில் 8 நாட்கள் முழு ஊரடங்கு கலெக்டர் அறிவிப்பு

குடியாத்தம் நகராட்சி பகுதியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வருகிற 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை 8 நாட்கள் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.

தினத்தந்தி

வேலூர்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக தினமும் ஏராளமான நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் குடியாத்தம் நகராட்சி பகுதி முழுவதும் வருகிற 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை முழுஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குடியாத்தம் நகராட்சி பகுதியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை 441 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக வணிகர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 31-ந் தேதி வரை 8 நாட்களுக்கு குடியாத்தம் நகராட்சி முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காய்கறி, இறைச்சி, மீன், மருந்துக்கடைகள், பெட்ரோல் பங்குகள் ஆகியவை மட்டும் ஊரடங்கின்போது திறந்திருக்கும்.

மளிகை, நகை, துணிக்கடைகள், ஹார்டுவேர் உள்ளிட்ட அனைத்து கடைகளும் நாளை (23-ந் தேதி) நள்ளிரவு 12 மணி முதல் வருகிற 31-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை மூடப்பட்டிருக்கும். காய்கறி, இறைச்சி, மீன்கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். மாவட்டம் முழுவதும் 26-ந் தேதி முழுஊரடங்கு என்பதால் அன்றைய தினத்தில் மருந்துக்கடைகள், பெட்ரோல் பங்குகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்படும். மருந்துக்கடைகள், பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் திறந்து இருக்கலாம். சிறு, குறு தொழிலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வழக்கம்போல் இயங்கும். ஓட்டல்கள் வழக்கம்போல் இரவு 9 மணிவரை திறந்து விற்பனை செய்யலாம். பேக்கரி, ஸ்வீட்ஸ்டால், டீக்கடைகள் திறக்க அனுமதி இல்லை.

எனவே குடியாத்தம் நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்கு 8 நாளைக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி வைத்து கொள்ளவும். இந்த 8 நாட்களும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே தொற்று பாதிக்கப்பட்டவர்களின் முதன்மை மற்றும் 2-ம் நிலை தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து சளிமாதிரி பரிசோதனை செய்யப்படும்.

நகராட்சி முழுவதும் நோய் தொற்று அதிகமுள்ள இடங்களில் முழுவீச்சில் மருத்துவ முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே வணிகர்கள், பொதுமக்கள் ஆகியோரின் நலனுக்காக எடுக்கப்படும் இந்த நடவடிக்கைக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு