கார்கில்,
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு, மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என மத்திய அரசு திங்கட்கிழமை அறிவித்தது. இதைத்தொடர்ந்து 4- வது நாளாக இன்றும் மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் தொடர்ந்தது. ஜம்மு மாவட்டத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 40 கம்பெனி மத்திய போலீஸ் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் ராணுவ வீரர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். செல்போன் இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரிலும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் சில தொலைபேசி மற்றும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கார்கில் பகுதியில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறப்பு கூட்டுக்குழு என்ற பெயரில் ஒன்று கூடிய 300-க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர். அப்போது போராட்டக்கார்களுக்கும் போலீசாருக்கு லேசான மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காஷ்மீர் முன்னாள் மந்திரியும் தேசிய மாநாட்டு கட்சி பிரமுகருமான குவாமர் அலி அக்கூன் என்பவர் கூறியதாவது:- ஜம்மு காஷ்மீர் ஒருங்கிணைந்த மாநிலமாக இருக்க வேண்டும், சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். அடிப்படை உரிமைகளை அரசு மீறியுள்ளது என்றார்.